துரோகம் வென்றதாக வரலாறு கிடையாது: டிடிவி தினகரன்
By DIN | Published On : 16th May 2019 08:24 AM | Last Updated : 16th May 2019 08:24 AM | அ+அ அ- |

துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது என்றார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பிஹெச். சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அரவக்குறிச்சி புங்கம்பாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்குகள்சேகரித்து அவர் மேலும் பேசியது:
அதிமுகவினருக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியுள்ளனர்.
அதற்கு நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாமல் ஒரு பரபரப்பை உருவாக்க சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேச வேண்டும்.
இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றார். ஆனால் மன்மோகன் சிங்கை சோனியாகாந்தி பிரதமராக்கினார். கமலுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது தவறில்லையா? துரோகத்தைப் பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர்.
துரோகிகளுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பாஜக, சந்திரசேகர ராவுடன் திமுகவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவுடன் திமுக பேசிய உண்மையை தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துவிட்டார். தமிழகத்தில் உண்மையான மக்கள் ஆட்சி அமைத்து தர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம் என்றார்.