முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
செந்தில்பாலாஜியின் பதவியை பறித்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
By DIN | Published On : 18th May 2019 09:24 AM | Last Updated : 18th May 2019 09:24 AM | அ+அ அ- |

செந்தில்பாலாஜியின் பதவியை பறித்தவர்களுக்கு மே 19-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பாடம் புகட்டுங்கள் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரசாரம் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கட்சி வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.
அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட தடா கோவில், வாவிகிணம், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்த அவர், இறுதியாக அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் அருகே திறந்த வேனில் வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் வாக்குச் சேகரித்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
நீங்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி பதவியை பறித்ததற்காக நியாயம் கேட்டு வந்துள்ளேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார், செந்தில்பாலாஜி ஆட்சியை கவிழ்க்க நினைத்தார் என்றும், அதற்காகத்தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வந்தது என்றும் ஒரு அபாண்டமான பொய்யை சொல்லியிருக்கிறார்.
இவர் ஒன்றும் ஆட்சியை எதிர்த்து வாக்களிக்கவில்லை. 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவில், எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கிறார் என்று கூறியதற்காக பதவியை பறித்தனர்.
தமிழகத்தில் அண்ணா, காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் முதல்வராக இருந்தார்கள். அவர்களிடம் எல்லாத்துறையின் அதிகாரம் இருக்கும். ஆனால் எடப்பாடி முதல்வரானதுடன் முதல்வர் பதவி மட்டுமின்றி, காவல்துறையோடு, பொதுப்பணித்துறையையும் சேர்த்து வைத்துக்கொண்டார். பொதுப்பணித்துறை மூலம் கொள்ளையடிக்கலாம் என்பதால், அவரை மாற்ற வேண்டும் எனக்கூறிய செந்தில்பாலாஜியுடன் 18 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. நீங்கள் வெற்றிபெற வைத்த செந்தில்பாலாஜியின் பதவியை பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட 19-ம் தேதி நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
ஆட்சி மாறும்: 24 மணி நேரமும் எங்கள் ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் திட்டமிடுகிறார், கனவு காண்கிறார் என முதல்வர் கூறுகிறார். கனவுதான் காண்பேன்; 23-ம்தேதி நிஜமாகவே நடக்கப்போகிறது. எடப்பாடி ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி. அந்த ஆட்சிக்கு மோடி ஒரு முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: இத்தொகுதியில் செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக வரும்போது, க.பரமத்தி புதிய தாலுகா உருவாக்கப்படும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும், முருங்கை குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும், நங்காஞ்சி, குடகனாற்றில் தடுப்பணை கட்டப்படும், தாதம்பாளையம் ஏரி தூர்வாரப்பட்டு, அமராவதி தடுப்பணை மூலம் நீர் நிரப்பப்படும். புகளூரில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும். தொகுதி மக்கள் 25,000 பேருக்கு 3 சென்ட் நிலம் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என வேட்பாளர் கூறியுள்ளார். இது தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும் என்றார்.
பிரசாரத்தில் திமுக கொறடா சக்கரபாணி, முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான க.பொன்முடி, கரூர் மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.