கரூர் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு: மாணவர்கள் திரளாக பங்கேற்பு
By DIN | Published On : 18th May 2019 08:58 AM | Last Updated : 18th May 2019 08:58 AM | அ+அ அ- |

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலம், தமிழ் பாடப்பிரிவுகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2019-2020 கல்வி ஆண்டின் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 15-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, விளையாட்டுத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவில் நடைபெற்றது.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக ஆங்கிலம், தமிழ் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வை கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் அர.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார் இந்த கலந்தாய்வு மூலம் ஆங்கில பாடப்பிரிவுக்கு 60 மாணவ, மாணவிகளும், தமிழ் பாடப்பிரிவுக்கு 60 மாணவ, மாணவிகளுக்கும் சேர்க்கப்பட உள்ளனர். இதையடுத்து வரும் 20,21-ம்தேதிகளில் அறிவியல் பிரிவுகளுக்கும், 24-ம்தேதி கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வை கல்லூரியின் பேராசிரியர்கள், பேராசிரியைகள் உள்ளிட்டோர் நடத்தி வருகிறார்கள்.