Enable Javscript for better performance
அதிமுக, திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக, திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 20th May 2019 08:22 AM  |   அ+அ அ-   |    |  

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்ததாக அதிமுகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் செயல்படுவதாக திமுகவினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.  
    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:  அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களை ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக அடைத்து வைத்துள்ளார்கள். இதுதொடர்பாக போலீஸாரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. கார்வழி திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நகல் எடுத்து வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்களித்த பின்னர் மாலையில் வந்து பணம் பெற்றுச்செல்லுங்கள் எனக்கூறியுள்ளார். சில இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து மாலை 3 மணிக்கு மேல் பணம் தருவதாகக் கூறியுள்ளனர்.  அரவக்குறிச்சி தொகுதியில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 50 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், வேலாயுதம்பாளையம் முதல் நொய்யல் வரையிலான பகுதியில் குறைந்த வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. காரணம் திமுக வேட்பாளர்தான்.   
    வேலாயுதம்பாளையம் நான்குரோடு, பேச்சிப்பாறை, அதியமான்கோட்டை, காந்தி நகர் போன்ற இடங்களில் டோக்கனில் ஸ்டார் போட்டு கொடுத்துள்ளனர்;  ஓரிரு நாளில் பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். அதிமுகவுக்கு அதிகளவு வாக்குகள் கிடைப்பதைத் தடுப்பதற்கு இதுபோன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான அராஜக செயலில் ஈடுபடுகிறார் செந்தில்பாலாஜி.  அவர் மீது சென்னை, புது தில்லி ஆகிய இடங்களில் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம் என்றார்.
    ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல் துறையினரும், தேர்தல் அதிகாரிகளும்: வி. செந்தில்பாலாஜி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுகழூரில் ஞாயிற்றுக்கிழமை காலை வாக்குப்பதிவு மையம் அருகே அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனை பகுதியில் திமுகவினர் அதிகளவில் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த அதிமுகவினர், வாக்காளர்களுக்கு இடையூறாக நின்றிருப்பதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் தெரிவித்தனர். இதனால் அங்கு திமுக, அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
    இதனிடையே அங்கு வந்த திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல் ஆணைய விதியின்படி வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 200 மீ. தொலைவில் எங்களது பணிமனையை அமைத்துள்ளோம். மேலும் வேட்பாளர் பெயர், சின்னம் கொண்ட பிளக்ஸ் பேனர் தான் வைத்துள்ளோம். இதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி இருக்கிறது. ஆனால் ஆளுங்கட்சியினர் வேட்பாளர் பெயர், சின்னத்துடன் தலைவர்களின் படமும் வைத்துள்ளனர்.  இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கூறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்தத் தேர்தலை பொருத்தவரை ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக காவல் துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் செயல்படுகின்றனர். மேலும் வாக்குச்சாவடிகளில் எங்களது கட்சியினரை  போலீஸார் விரட்டுகிறார்கள் என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp