அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு
By DIN | Published On : 20th May 2019 08:23 AM | Last Updated : 20th May 2019 08:23 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில், மொத்தம் 84.28 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 19-இல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல், பரிசீலனைக்குப் பின்னர், இறுதியாக இத்தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது, மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் உள்பட 63 பேர் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித்தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். கடந்த 15 நாள்களாக நடைபெற்றுவந்த தீவிர பிரசாரம் 17 ஆம் தேதியுடன் முடிவுற்றது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டன. அரவக்குறிச்சியில் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் வாக்குச்சாவடிக்கு தலா 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். படுத்த படுக்கையாக இருந்த முதியவர் ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து அவரை வாக்களிக்கச் செய்தனர். நடக்க இயலாத முதியவர்களுக்கு நகரும் நாற்காலி( வீல் சேர்) வசதி செய்துதரப்பட்டது. மேலும், முதல்தலைமுறை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தாமதமான வாக்குப்பதிவு:
பள்ளப்பட்டி சௌந்திராபுரத்தில் வாக்குச்சாவடி எண் 195-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,3,2,4 என வரிசை மாற்றி வைக்கப்பட்டிருந்தது குறித்து அறிந்த அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது அங்கு வந்து சரிசெய்யக் கோரினார்.
இதையடுத்து உதவி தேர்தல் அதிகாரிகள் வந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசையாக வைத்தபின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அங்கு சுமார் ஒன்றே கால் மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. இதேபோல சின்னதாராபுரம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் மின் தடை ஏற்பட்டதால் 7.15 மணியளவில் வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் துவங்கியது. புஞ்சைத்தோட்டக்குறிச்சியில் வாக்குப்பதிவு மையத்திற்கு 200 மீ. தொலைவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் வாக்காளர்களிடம் வாக்குசேகரித்தனர்.
தகவலறிந்து அங்குவந்த அதிமுகவினர் திமுகவினர் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியைப் பார்வையிட வந்த காவல் துறை துணைத் தலைவர் லலிதா லட்சுமி இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து போலீஸார் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டினர்.
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் முற்பகல் 11.10 மணியளவில் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான த.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் மேலும் கூறியது:
அரவக்குறிச்சி தொகுதியில் இதுவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. சில இடங்களில் இருந்து வந்த புகாரின் பேரில் பறக்கும் படை, காவல் துறையினர் அனுப்பி வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது தேர்தல் நடத்தை விதிமீறல். வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏதும் ஏற்படவில்லை. 1,2,3 என்ற வரிசையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படாமல் இருந்தால், வாக்குப்பதிவு நடத்த சாத்தியமில்லை. பணப்பட்டுவாடா புகார் வரப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றார்.
நடுவிரலில் வைக்கப்பட்ட மை
கடந்த மாதம் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி மக்களும் பங்கேற்றதால், அந்த தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்தது. ஆதலால் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் இடது கை நடு விரலில் மை
இடப்பட்டது.
84.28% வாக்குப்பதிவு
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 99,052 ஆண் வாக்காளர்களும், 1,06,219 பெண் வாக்காளர்களும், 2 இதரரும் என மொத்தம் 2,05,273 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 81,143 ஆண் வாக்காளர்கள், 91,972 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,73,115 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 84.33 சதவீதமாகும்.