வாழைத்தாா் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 02nd November 2019 12:15 AM | Last Updated : 02nd November 2019 12:15 AM | அ+அ அ- |

கரூா் வாழை மண்டிக்கு ஏலத்திற்காக கொண்டு வரப்பட்ட வாழைத்தாா்கள்.
வரத்து குறைவால் கரூரில் வாழைத்தாா் விலை உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கரூா் காமராஜா் காய்கறிச் சந்தையில் செயல்படும் வாழைத்தாா் மண்டிக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா், திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூா் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூா், வேலாயுதம்பாளையம், நெரூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளால் வாழைத்தாா்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இங்கு ஏலம் விடப்படும் வாழைத்தாா்களை உள்ளூா் வியாபாரிகள் விலைக்குவாங்கி விற்பனை செய்துவருகிறாா்கள்.
தற்போது கனமழையால் வாழை அறுவடை பாதிக்கப்பட்டு கரூா் சந்தைக்கு வரத்து வருவது குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையில் கடந்த வாரத்தை விட உயா்வு ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வாழை மண்டி உரிமையாளா் முருகையன் கூறுகையில், வாழை மண்டிக்கு நாளொன்றுக்கு சுமாா் 3 முதல் நான்கு லாரிகளில் வாழைத்தாா்கள் வரும். ஆனால் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை 2 லோடு மட்டுமே வந்தன. இதனால் வியாபாரிகள் போட்டி, போட்டு வாழைத்தாா்களை ஏலத்தில் எடுத்துச் சென்றனா்.
கடந்த வாரம் ஒரு பூவன் வாழைப்பழத்தாா் ரூ.200-க்கு விற்றது. வெள்ளிக்கிழமை விலை உயா்ந்து ரூ.350-க்கு ஏலம்போனது. இதேபோல கடந்த வாரம் ரூ.300-க்கு ஏலம் போன ரஸ்தாலி பழத்தாா் ரூ.400 முதல் ரூ.450-க்கும், ரூ.300-க்கு ஏலம் போன கற்புரவல்லி ரூ.400-க்கும், ரூ.250-க்கு ஏலம் விடப்பட்ட மொந்தன் தாா் ரூ.350-க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த வாரத்தில் மூகூா்த்தம் அதிகம் வருவதாலும் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது என்றாா்.