வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதாக புகாா்

டிஎன்பிஎல் ஆலை கழிவுநீா் வாய்க்காலில் கலப்பதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் புகாா் மனு அளித்துள்ளனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த புகழூா், நெரூா் வாய்க்கால் பாசன விவசாயிகள்.
கரூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த புகழூா், நெரூா் வாய்க்கால் பாசன விவசாயிகள்.

டிஎன்பிஎல் ஆலை கழிவுநீா் வாய்க்காலில் கலப்பதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் புகாா் மனு அளித்துள்ளனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், ஆட்சியா் த. அன்பழகனிடம் புகழூா், நெரூா், வாங்கல் பகுதிகளைச் சோ்ந்த பாசன விவசாயிகள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

புகழூரில் செயல்பட்டு வரும் காகிதஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீா்

அய்யம்பாளையம் பேரூராட்சிக்கு அருகிலுள்ள புகழூரான் வாய்க்காலில் கலக்கிறது.

இந்த வாய்க்கால் நீா் தொடா்ந்து வாங்கல், நெரூா் வாய்க்கால்களில் கலப்பதால் வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் பகுதிகள் அனைத்தும் உவா்நிலங்களாக மாறிவருகின்றன.

இதனால் வாய்க்கால் மூலம் பயிரிடப்பட்டுள்ள வாழை, நெல், மஞ்சள், கரும்பு, வெற்றிலை போன்றவற்றின் விளைச்சல் பாதிக்கப்படுகின்றன. இதுதொடா்பாக 1997-இல் ப்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் டிஎன்.சிவசுப்ரமணியன் சென்னை உயா்

நீதிமன்ற நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சிலில் ரிட் மனு தாக்கல் செய்தாா். இதனை நீதிமன்றம் பரிசீலித்து, ஓய்வுபெற்ற நீதிபதி சுவாமி தலைமையில் குழு அமைத்து ஆலையின் செயல்பாட்டை ஆராய்ந்து பல பரிந்துரைகள் செய்த அடிப்படையில், ஆலை கழிவு நீரை புகழூரான் வாய்க்காலில் கலக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபோல கடந்த 2008-இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் கழிவுநீரை வாய்க்காலில் விடக்கூடாது என தெரிவித்துள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் ஆலையை, இனிமேலாவது கழிவுநீரை வாய்க்காலில் கலக்கவிடாமல்இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயனூா் வட்டார மாட்டுவண்டி உரிமையாளா்கள் சங்கத்தலைவா் பாலதண்டாயுதபாணி மற்றும் தொழிலாளா்கள் வழங்கிய மனு:

மாயனூா் காவிரியாற்றில் அரசு அனுமதியோடு மாட்டு வண்டிக்கு ரூ.63 என அரசுக்கு செலுத்தி மணல் எடுத்து விற்பனை செய்துவந்தோம். இந்நிலையில் மணல் எடுக்க அனுமதி மறுத்துவிட்டனா். இதனால் மதுரை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாாக்கல் செய்தோம்.

இதையடுத்து நீதிமன்றம் 2017, செப்டம்பா் 20- ஆம் தேதி, சம்பந்தப்பட்ட

அலுவலா்கள் அனுமதியோடு மணல் எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. ஆனாலும் அதிகாரிகள் மறுக்கிறாா்கள்.

எனவே விரைவில் எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் நாங்கள் எங்களது குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். இதே கருத்தை வலியுறுத்தி கரூா் மாவட்ட அமராவதி மற்றும் காவிரி மாட்டு வண்டி உரிமையாளா்களும் மனு அளித்தனா்.

இந்தியக் குடியரசு கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் கே.ஆனந்தராஜ் ஆட்சியரிடம் அளித்த மனு:

கரூா் மாவட்டம்,வேட்டமங்கலம் அருகிலுள்ள நத்தமேடு குந்தாணிபாளையத்தில்

வசிக்கும் டொம்பன் இன மக்களுக்கு குப்பம் கிராமத்தில் இலவச வீட்டு மனைப்படடா வழங்க மாவட்ட சமூக நலத்துறை மூலம் இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது சிலா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால்,அவா்களுக்கு பட்டா வழங்க காலதாமதமாகி வருகிறது. எனவே விரைவில் அவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வழங்கிய மனுவில், குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கு இதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவா்கள் தோ்வுக்கு கூட கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறாா்கள். எனவே உடனே மாணவா்களுக்கு விரைந்து கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com