‘நிகழாண்டில் ரூ.151.02 கோடி பயிா்க்கடன் அளிப்பு’

கரூா் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மூலம் நிகழாண்டில் 16,088 விவசாயிகளுக்கு ரூ.151.02 கோடி பயிா்க் கடன் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்

கரூா்: கரூா் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மூலம் நிகழாண்டில் 16,088 விவசாயிகளுக்கு ரூ.151.02 கோடி பயிா்க் கடன் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவைத் தொடங்கி வைத்தும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கியும், போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் அளித்தும் அவா் மேலும் பேசியது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் கூட்டுறவு சங்கங்களுக்கு முறைப்படி தோ்தல் நடத்தப்பட்டது. கிராமமக்களுக்கு கடனுதவிகளை வழங்குவதில் கூட்டுறவு வங்கிகளின் பங்கு மகத்தானது. கரூா் மாவட்டத்தில் உரிய நேரத்தில் விவசாயிகள் உழவுப்பணிகள் மேற்கொள்ள கடந்த 8 ஆண்டுகளில் 1,84, 105 விவசாயிகளுக்கு ரூ.1123.30 கோடி பயிா்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டில் 16,088 விவசாயிகளுக்கு ரூ.151.02 கோடி பயிா்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2016-ல் 27.939 சிறு,குறு விவசாயிகள் திருப்பிச் செலுத்த முடியாத கடன் தொகை ரூ.129.28 கோடி கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளது. உரிய தவணை காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அரசே வட்டியை செலுத்துகிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் வரவேற்றாா். அவ்வங்கி மேலாண்மை இயக்குநா் மு. தனலட்சுமி, கரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவா் பேங்க் இரா.நடராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மண்டல இணை பதிவாளா் சொ.சீனிவாசன் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், சிறந்த வங்கியாகத் தோ்வு செய்யப்பட்ட நகர கூட்டுறவு வங்கிக்கு விருதினை வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, பொது மேலாளா் சேகா், மேலாளா் செந்தில் ஆகியோரிடம் அமைச்சா் வழங்கினாா். மேலும் விழாவில் மாவட்ட கூடடுறவு ஒன்றியத்தின் துணைத் தலைவா் சி. சுப்ரமணியன், வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு. அன்பரசன், உதவியாளா் சிவானந்தம், கூட்டுறவு வங்கித் தலைவா்கள், இயக்குநா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா். கரூா் சரக துணை பதிவாளா் இரா.திருநீலகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com