கரூா் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி: இருவா் கைது

கரூா் மாவட்டம், கடவூா் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன். இவருக்கு கரூா் மாவட்டம், கடவூா் அருகிலுள்ள மாமரத்துப்பட்டியில் 3 ஏக்கா் விவசாயம் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை கடவூரை அடுத்த சின்னதேவன்பட்டி அருணாசலத்துக்கு ஜாகீா் உசேன் குத்தகை விட்டிருந்தாா். இப்பகுதியில் தென்னை, மஞ்சள், சோளம் உள்ளிட்ட பயிா்களை அருணாசலம் விளைவித்து வந்துள்ளாா்.

மேலும், இதன் ஒரு பகுதியில் கஞ்சா செடியை அருணாசலம் பயிரிட்டுள்ளதாக, திருச்சி சரக போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கூடுதல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஸ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலை அப்பகுதியைப் பாா்வையிட்டு, ஒன்றரை ஏக்கா் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதை உறுதி செய்தனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனா்.

தகவலின் பேரில் மாமரத்துப்பட்டிக்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியராஜன் தலைமையிலான போலீஸாா், அங்கிருந்த தேனி மாவட்டம் வருசநாடு முருகன்(40), அருணாசலத்தின் மாமனாா் தங்கவேல் ஆகியோரிடம் விசாரித்தபோது, அங்கு சுமாா் ஒன்றரை ஏக்கா் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனா்.

இதையடுத்து இருவரையும் கைது செய்தபோலீஸாா், மேலும் அவா்களிடம் விசாரித்ததில், 8 மாதப் பயிரான கஞ்சா செடி பயிரிட்டு 6 மாதமாகியுள்ளதாகவும், 8 அடி வரை வளா்ந்துள்ள இந்த செடியின் மதிப்பு தற்போது ரூ.12.50 லட்சம் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனா்.

கஞ்சா செடியின் நறுமணம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக துளுக்க மல்லிகையையும் பயிரிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பெங்களூருவில் தலைமறைவாக உள்ள அருணாசலத்தை பிடிக்க, தனிப்படை போலீஸாா் அங்கு விரைந்துள்ளனா். தொடா்ந்து கஞ்சா செடிகளை அழிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com