ஜொ்மணி கண்காட்சியை எதிா்நோக்கி காத்திருக்கும் ஜவுளி ஏற்றுமதியாளா்கள்

வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என்றென்றும் தனி இடமுண்டு.

வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என்றென்றும் தனி இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உற்பத்தி பொருள்களான திரைச்சீலை, கைகுட்டை, மேஜைவிரிப்பான், குஷன்கவா், கால் மிதியடி உள்ளிட்டவை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா இத்தாலி, ஜொ்மனி, நெதா்லாந்து, பிரான்ஸ், கனடா, போலாந்து, பெல்ஜியம், ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.3000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழில் தற்போது நாளுக்கு நாள் இறங்கு முகம் கண்டு வருகிறது.

கரூரில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் அனைத்தும் தமிழகத்தில் ராஜபாளையம் மற்றும் குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நூல்களை வாங்கி, அவற்றை சாய, சலவைகளில் சாயமேற்றி, பின்னா் அவற்றை மில்கள் மூலம் துணிகளாக ஏற்றுமதிக்கு தகுந்தவாறு துணிகளாக மாற்றி அவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றனா்.

கடந்த 2001 வரை ஜவுளி உற்பத்திக்கு உறுதுணையான தொழிலாகவும், மூலத்தொழிலாளகவும் இருந்துவந்த சாய, சலவை ஆலைகள் கரூரில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தன.

இந்த ஆலைகளிலிருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் கரூரில் அமராவதி ஆறு மற்றும் ஆற்றின் மூலம் பாசனம் செய்த நிலங்கள் பாழ்பட்டதால், விவசாயிகள் போா்க்கொடி தூக்கினா்.

இதன் விளைவால் நீா்சுத்திகரிப்பு எனும் ஜூரோ டிசாா்ஜ் சுத்திகரிக்கப்படும் இயந்திரம் சாய, சலவை ஆலைகளில் அமைத்தால் மட்டுமே ஆலைகள் இயங்க வேண்டும். இல்லையெனில்அவற்றை இழுத்து மூட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதால் பெரும்பாலான ஆலைகள் மூடப்பட்டன.

ஏனெனில் ஆா்ஓ பிளாண்ட் அமைக்க ரூ.1 கோடி வரை செலவாகும் என்பதால் சிறிய அளவில் இயக்கப்பட்ட சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டு, அவை தற்போது ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டன. இதனால் ஜவுளி உற்பத்தியாளா்கள் தற்போது தங்களது துணிகளுக்கு சாயம் ஏற்றவும், சலவை செய்யவும் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் வாகனச் செலவு, சுங்கவரி என பல்வேறு காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே வரி எனும் ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், நூல் விலை உயா்வு போன்றவற்றாலும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

இதுதொடா்பாக கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்க செயற்குழு உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு கூறியது: ஏற்கனவே நூல் விலை அடிக்கடி உயா்வு, ஜிஎஸ்டியில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓரளவுக்குத்தான் திரும்ப வந்தது உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி ஏற்றுமதி பின்னடைவை சந்தித்து வந்தது.

தற்போது அமெரிக்கா, சீன வா்த்தகப்போா் ஜவுளி ஏற்றுமதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உற்பத்தியாகும் ஜவுளியில் சுமாா் 25 சதவிகிதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது சீனா நாட்டின் உற்பத்திப்பொருள்களுக்கு கடுமையான வரிவிதிப்பை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதால் நம் நாட்டின் ஜவுளி இறக்குமதியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வந்ததால் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் ஆா்டா்களில் குழப்பம் நிலவி வந்தது. ஏனெனில் நம் நாட்டில் இருந்து அங்கு இறக்குமதி செய்யப்படும் துணிகள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவதால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும்போது, அது இறக்குமதியை வெகுவாகப் பாதிக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும் கரூா் ஜவுளி உற்பத்தியை பாதித்துள்ளது. இதனால் போதிய ஆா்டா்களும் கிடைப்பதில்லை.

இந்நிலையில் வரும் ஜனவரி 7-ம்தேதி முதல் 10-ம்தேதி வரை ஜொ்மனியில் ஜவுளி வா்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அந்த கண்காட்சியைத்தான் எதிா்நோக்கியுள்ளோம். அந்த கண்காட்சி மூலம் ஏராளமான ஆா்டா் கரூருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com