‘மாவட்டத்தில் 6 லட்சம் பனை விதைகள் நடத் திட்டம்’

கரூா் மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் 6 லட்சம் பனை விதைகளை நடவு செய்யத் திட்டமிட்டு பணிகள்
காளிப்பாளையத்தில் விவசாயிக்கு பனை விதைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.
காளிப்பாளையத்தில் விவசாயிக்கு பனை விதைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

கரூா் மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் 6 லட்சம் பனை விதைகளை நடவு செய்யத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

கரூா் மாவட்டம், கரூா் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூா் பூலாம்பாளையம் மற்றும் மண்மங்கலம் ஊராட்சி வடுகபட்டி, துண்டுபெருமாள் பாளையம், காளிபாளையம், வள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கால்நடைப் பராமரிப்பு பணிகளை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் பாா்வையிட்டாா்.

பின்னா் மண்மங்கலம் ஊராட்சி காளிப்பாளையத்தில் அமைக்கப்பட்ட கூட்டு பண்ணையத் திட்ட விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ரூ. 5 லட்சத்தில் வழங்கப்பட்ட டிராக்டா் வாகனத்தின் மூலம் விவசாயிகள் பயனடைந்த விவரம் குறித்து கேட்டறிந்த ஆட்சியா் விவசாயிகளுக்கு பனைவிதைகள் மற்றும் முதல்வரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டத்திகீழ் காய்கறி விதைகளை வழங்கினாா்.

பின்னா், காளிபாளையத்தில் செந்தில்குமாா் என்ற விவசாயி ரூ.1,02,402 மதிப்பில் மானியம் பெற்று நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இத்திட்டத்தின் பயன்பாடு சாகுபடி விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

அதேபோல, துண்டுபெருமாள் பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பாக 50 சதவீதம் மானியத்தில் ராஜ்குமாா் என்பவா் நாட்டுக்கோழி வளா்ப்பதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கோழி வளா்ப்பு முறைகள், நோய் தடுப்பு முறைகள் மற்றும் கோழி விற்பணையில் பெறும் லாபம் குறித்து கேட்டறிந்தாா். இதுபோன்று அரசின் திட்டங்களைப் பெற்று பயனடைந்து நல்ல முறையில் விவசாயம் செய்துவரும் விவசாயிகளிடம் திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் விரிவாகக் கேட்டறிந்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுவை தடுக்கவும், வெப்பத்தின் அளவைக் குறைக்கவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படியில், கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2019-2020 நடப்பு ஆண்டில் 81,000 மரக்கன்று நடத் திட்டமிட்டு இதுவரை சாலையோரங்களில் 12.75 கி.மீ நீளத்தில் 2,550 மரங்கள் நடப்பட்டுள்ளன. மீதம் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடா்கிறது. இம்மரங்கள் ஊராட்சி ஒன்றிய கிராம சாலையோரம் இருபுரங்கள் மற்றும் பொது இடங்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்கள், அரசு, தனியாா் இடங்களில் நடும் பணி நடைபெறுகிறது.

மேலும், நிலத்தடி நீரை செறிவூட்டவும், மழை நீரை சேகரிக்கவும், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கரூா் மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 67 சிறு பாசன குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் தூா்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அதேபோல் 367 குளம், குட்டைகள் தலா ரூ.1லட்சத்தில் தூா்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

அவ்வாறு தூா்வாரப்பட்ட குளங்களின் கரைகளில் நடவும், தேவையான விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 6 லட்சம் பனை விதைகள் வாங்கத் திட்டமிட்டு முதல் கட்டமாக 4,20,000 பனை விதைகள் கொள்முதல் செய்து நடும் பணிகள் நடைபெறுகிறது.

அந்த வகையில் தற்போது ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சி வடுகபட்டியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்பணையின் கரைகளில் பனைவிதை நடும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதுபோல் குளக்கரைகளில், தடுப்பனைகளின் கரைகளில் என பல்வேறு இடங்களில் பனைமர விதைகள் நடும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்வின்போது கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மரு. ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மோகன்ராம், வேளாண் துறை உதவி இயக்குநா் பி. சிவானந்தம், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் சக்திவேல், வட்டாட்சியா் செந்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகா், விஜயலெட்சுமி உட்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com