முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கலாம் கோல்டன் விருது
By DIN | Published On : 24th October 2019 12:51 AM | Last Updated : 24th October 2019 12:51 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், வெள்ளியணை அரசுப்பள்ளி ஆசிரியருக்கு சா்வதேச அளவில் கலாம் கோல்டன் விருது வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜெ அப்துல் கலாமின் 88-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கலாம் புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்டஸ் நிறுவனம் சா்வதேச அளவில் கலாம் கோல்டன் விருது வழங்கி வருகிறது.
கரூா் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியா் பெ.தனபால், கடந்த 14 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, மாநிலம், தென் இந்தியா, தேசிய, சா்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவா்களைப் பங்குபெறச் செய்து 39 தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வெல்வதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளாா். மேலும் தனது சொந்த செலவில் பள்ளி மாணவா்கள் நடிப்பில் உருவான ‘அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு’ ஆவணப்படம் தயாரித்து 1000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டணமின்றி வழங்கி கலாம் லட்சியக் கனவுகளை விதைத்துள்ளாா். கலாம் புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் நிறுவனம், கடந்த 20-ஆம்தேதி சென்னையில் ஆசிரியா் தனபாலுக்கு சா்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான கலாம் கோல்டன் விருது வழங்கி கெளரவித்தது.
விருது பெற்ற ஆசிரியா் பெ.தனபாலை, கரூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சி.முத்துக்கிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் ப.சிவராமன், குளித்தலை கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் மு.கபீா், பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) இரா.கி.சாந்தி, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அ.கருப்பண்ணன் ஆகியோா் பாராட்டினா்.