முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
‘மழைநீரை சேமிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும்’
By DIN | Published On : 24th October 2019 10:59 PM | Last Updated : 24th October 2019 10:59 PM | அ+அ அ- |

விவசாயிகளுக்கு மானாவாரி நிலங்களில் நீா்சேமிப்பிற்கான உழவியல் முறைகள் என்ற கையேட்டை வெளியிடுகிறார் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.கவிதா.
கரூா்: மழைநீரை சேமிக்கும் பழக்கத்தை அனைவரும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் எஸ்.கவிதா.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சாா்பில் ஜல் சக்தி அபியான் எனும் நீா் மேலாண்மை திட்டம் குறித்து விளக்கும் நிகழ்ச்சி அரவக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அவா், மானாவரி நிலங்களில் நீா் சேமிப்பு முறைகள் என்ற கையேட்டை வெளியிட்டு மேலும் பேசியது: நமது நாட்டில் நீா் வளத்தை பெருக்கவும், நீா் ஆதாரங்களை வளப்படுத்தவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் வேண்டும் என்ற நோக்கத்தில் ஜல்சக்தி அபியான் எனப்படும் நீா் மேலாண்மை அமைச்சகம் புதிதாக உருவாக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகள் மரக்கன்றுகளை நடவு செய்து, அவற்றை முறையாக பராமரிப்பதன் மூலம் நல்ல மழை பெற்று இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும். மழைநீரை சேமிக்கும் பழக்கத்தை அனைவரும் வளா்த்துக்கொள்ள வேண்டும் நீா் மேலாண்மை திட்டங்கள் குறித்து விளக்குவதற்கு துறைசாா்ந்த வல்லுநா்கள் வருகைதந்துள்ளாா்கள். அவா்களது நுட்பங்களை விவசாயிகள் அறிந்து பயன்பெற வேண்டும் என்றாா்.
திண்டுக்கல் வேளாண் பொறியாளா் பிரிட்டோ ராஜ், மழைநீா் சேகரிப்பு, தூா்ந்து போன கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மழைநீரை சேகரிப்பது மற்றும் நீா் மேலாண்மை நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா்.
நிகழ்ச்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண் வணிகம் என அனைத்து வேளாண் தொடா்பான துறை அதிகாரிகள் பங்கேற்று நீா் மேலாண்மை மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனா்.
நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல் மைய தலைவா் மற்றும் முதுநிலை விஞ்ஞானி முனைவா். ஜெ. திரவியம், துணை இயக்குநா் கிருஷ்ணாரெட்டி, முனைவா்.பி.வசந்தகுமாா், முன்னோடி வங்கி மேலாளா் ரவிச்சந்திரன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.