"ஜூலையில் மட்டும் 7,805 பேருக்கு ரூ.16.11 கோடி ஓய்வூதியம்'
By DIN | Published On : 11th September 2019 08:41 AM | Last Updated : 11th September 2019 08:41 AM | அ+அ அ- |

ஜூலை மாதம் மட்டும் கரூர் மாவட்டத்தில் 7,805 ஓய்வூதியர்களுக்கு ரூ.16.11 கோடி ஓய்வூதியம் வழங்கபட்டுள்ளது எனத் தெரிவித்தார் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர்.
தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் கருவூல கணக்குத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி சு. ஜவஹர் இறுதிக் கட்டப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அனைத்து மாவட்டத்திற்கும் பயணம் மேற்கொண்டு மண்டல, மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் வாரியாகஆய்வு நடத்தியதில், கரூர் மாவட்டம் இத்திட்டத்தை செயல்படுத்த முன்னோடி மாவட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே கோவை மண்டலத்திற்குட்பட்ட கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கபயிற்சி திங்கள்கிழமை துவங்கியது.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் முன்னிலையில் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு.ஜவஹர் பேசியது:
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மிகத் துல்லியமாக நடத்த இயலும். அரசுப் பணியாளர்களை மிகச் சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.
இத்திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் 337 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் 13, 433அரசுப்பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பட்டியல் சமர்ப்பிக்கும் பணியில் உள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 65,51, 42, 253 சம்பளமாக கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கரூர் மாவட்டத்தில் 7,805 ஓய்வூதியர்களுக்கு ரூ.16,11, 08, 882 ஓய்வூதியமாக ஜூலை மாதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. சம்பளமில்லா பட்டியல்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் வாயிலாக ரூ.20,46,16,632 செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சி. ராஜேந்திரன், கூடுதல் இயக்குநர்(மின்ஆளுகை) மகாபாரதி, மண்டல இணை இயக்குநர்கள் இரா. பூங்கோதை, புவியரசு, நாகராஜன், முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கரூர் மாவட்டக்கருவூல அலுவலர், க. ரவிச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்டக் கருவூலஅலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சியில் கரூர் மாவட்டத்திலுள்ளஅனைத்துக் உதவிக் கருவூல அலுவலர்கள், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, மருத்துவத் துறை, நீதித்துறை, காவல்துறை, சமூகநலத்துறைகளிலிருந்து 182 அலுவலர்களும், பள்ளிக்கல்வித் துறையிலிருந்து 117 பள்ளிகளிலிருந்து 325 அலுவலர்களும் பங்கேற்றனர்.