நெரூர் கிளைவாய்க்கால் கரை உடைந்து வீடுகள்,வயல்களுக்குள் புகுந்த நீர்: கோரைப்பயிர் நாசம்
By DIN | Published On : 11th September 2019 08:40 AM | Last Updated : 11th September 2019 08:40 AM | அ+அ அ- |

நெரூரில் கிளைவாய்க்காலை தூர்வாராததால் இரண்டாவது முறையாக கரை உடைந்து வீடுகளுக்குள்ளும், வயல்களுக்குள்ளும் காவிரி நீர் புகுந்தது. இதனால் சுமார் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோரை பயிர்கள் சேதமடைந்தன.
கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமான 120 அடியையும் நீரின் அளவு எட்டியதால் அணைக்கு வரும் நீரான 65,000 கன அடி நீரும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 65,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் வரும் நீர் கரூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்களுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெரூரில் காவிரியில் இருந்து பிரதான நெரூர் வாய்க்காலுக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நெரூர் வாய்க்கால்களின் கிளை வாய்க்கால்களுக்கும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்த கிளைவாய்க்கால்களில் நெரூர் அக்ரஹாரம் பகுதியில் கரை உடைந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்தது. இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நெரூர் கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாத வகையில், பிரதான வாய்க்காலின் ஷட்டர்களை மூடினர். இதையடுத்து நெரூர் கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் செல்வது தடுக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்த நீர் வடியத்தொடங்கியது.
இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில், முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. ஆனால் நெரூர் தென்பாகம் பகுதியில் சில வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.
நூறு நாள் வேலைத் திட்டப்பணியாளர்களும் கூட இங்கு வந்து வேலை செய்யவில்லை. இதனால்தான் வாய்க்காலில் தண்ணீர் அதிகளவு வந்தபோது கரை பலமிழந்து உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வெளியேறியது. சுமார் 5 ஏக்கரில் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கோரைக்குள் நீர் புகுந்துவிட்டன.
இதனால் கோரைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட கோரை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.