தோகைமலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா

தோகைமலை அரு கே பட்டவன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் 10 ஊர் மந்தை மாடுகள் பங்கேற்றனர்.

தோகைமலை அரு கே பட்டவன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் 10 ஊர் மந்தை மாடுகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள பில்லூர் ஊராட்சிக்குட்பட்ட கம்பளிநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினருக்குச் சொந்தமான பட்டவன் கோயில் உள்ளது. 
பசாப்பாளையப்பட்டு மந்தையில் உள்ள இக்கோயிலில் மாலை தாண்டும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 
நிகழாண்டு  திருவிழா கடந்த 2-ஆம் தேதி பூ போட்டு 10 மந்தையர்களுக்கு அழைப்பு விடுத்து தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதமிருந்து பசாப்பாளையபட்டு மந்தையில் உள்ள பட்டவன் சுவாமிக்கு நாள்தோறும் மூன்று கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். 
தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் பட்டவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கொலுக்கட்டை வைத்து படைத்து சிறப்பு பூஜை செய்தனர். 
இரண்டாம் நாளான 3-ஆம் தேதி பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செய்து வழிபட்டனர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடுகள் மாலை தாண்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகளுடன் வந்திருந்த 10 மந்தையர்களுக்கு கோயில் முன் உருமி மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
பின்னர் பட்டவன் கோயில் முன்பாக அனைத்து மந்தைகளின் மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க, பசாப்பாளையபட்டு நாயக்கர் மந்தையின் எதிரே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு எல்லைசாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அபிஷேகம் செய்து அனைத்து மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.  
கொட்டும் மழையிலும் அங்கிருந்து பசாப்பாளையபட்டு மந்தையில் அமைக்கப்பட்ட  எல்லைக் கோட்டை நோக்கி மாடுகள் ஓடி வந்தன. 
இதில் முதலாவதாக ஓடிவந்த கோலகப்புலி நாயக்கர் மந்தை மாடு, இரண்டாவதாக வந்த சின்னகாப்பிபாபி நாயக்கர் மந்தை மாடுகளுக்கு சமூக வழக்கப்படி 3 கன்னிப் பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை தூவி எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது.  பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் பட்டவன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பட்டவன் சாமிக்கு மஞ்சள் நீராட்டுடன் வழியனுப்பினர்.  
முன்னாள் ஊராட்சித் தலைவர் ராகவன் மற்றும் ஊர் நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com