Enable Javscript for better performance
சீமைக்கருவேல மரங்களை ஆராய செயற்கைக்கோள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சீமைக்கருவேல மரங்களை ஆராய செயற்கைக்கோள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 14th September 2019 08:54 AM  |   அ+அ அ-   |    |  

    தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் சீமைக்கருவை மரங்கள் குறித்து ஆய்வுக்காக செயற்கைக்கோளை தயாரித்து, விண்ணில் ஏவிய கரூர் மாவட்ட வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டினார்.
    புவியில் நீர் மட்டம் குறையக் காரணமாக சீமைக்கருவை மரங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய கரூர் மாவட்டம்,வெள்ளியணை,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் பெ. தனபால் வழிகாட்டலால் தயாரித்த 30 கிராம் எடைகொண்ட நீர் செயற்கைக்கோள் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரி, ஸ்பேஸ் போர்ட் இந்தியா ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் வியாழக்கிழமை ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன் ராக்கெட்டில் காலை 11.25 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
    செலுத்தப்பட்ட 28 வினாடிகளில் செயற்கைக்கோள் 35 கி.மீ அதாவது 1 லட்சத்து 12 ஆயிரம் அடி உயரம் விண்ணில் இலக்கைச் சென்றடைந்தது. பின்னர் மூன்றரை மணி நேரப் பயணத்திற்கு பின் வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை வேறுபாடு காரணமாக ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூன் வெடித்ததும், பாராசூட் திறக்கப்பட்டு செயற்கைக்கோள்கள் புவியின் ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி பாதுகாப்பான முறையில் இறக்கப்பட்டு ஏவுதளத்தில் இருந்து  170 கி.மீ  அப்பால் வேலூர் மாவட்டத்தில் புவியை வந்தடைந்தது. 
    இந்நிகழ்வை தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மீண்டும் செயற்கைக்கோளை கைப்பற்றி , தொடர் ஆய்வுக்காக நீர் செயற்கைக்கோளை வெள்ளியணை,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தது.
    செயற்கைக்கோள் ஏவிய நிகழ்வை நேரில் பார்வையிட்டு வந்த  மாணவர்கள் கோ. சுகந்த், மு. விஷ்ணு, கா. பசுபதி, சு.ஜெகன், சி.நவீன்குமார் ஆகியோரையும், அவர்களது வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபாலையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி. முத்துக்கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சா. சிவராமன் ஆகியோர் பாராட்டினர். 
    பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) இரா.கி. சாந்தி, பள்ளி கட்டடக் குழுத் தலைவர் வீ. ராமநாதன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.கருப்பண்ணன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கச் செயலர் அ. கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
     

    kattana sevai