நீர்நிலைகளைத் தூர்வார ரூ. 7.2 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

கரூர் மாவட்டத்தில் 67 சிறுகுளங்கள், 367 குளங்கள், குட்டைகள் ஆகியவற்றைத் தூர்வார ரூ. 7.2 கோடி நிதி

கரூர் மாவட்டத்தில் 67 சிறுகுளங்கள், 367 குளங்கள், குட்டைகள் ஆகியவற்றைத் தூர்வார ரூ. 7.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 30 பகுதியில் உள்ள ராமானூர், வார்டு எண் 31-ல் உள்ள அருணாசலம் நகர், பசுபதிபாளையம்,  பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் பேசியது:
மக்களைத்தேடி அரசு என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், சிறப்பு குறைதீர் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம்  நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்கள்தோறும் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன்பேரில் கரூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இதுவரை 32,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 15 கோடியில் சுமார் 48,500 குடிநீர் இணைப்புகளுக்கு புதிய பைப்லைன் அமைக்கப்பட்டு மீட்டர்பொருத்தும் பணி நடைபெறுகிறது. நடைபெறும் மூன்று குடிநீர் திட்ட பணிகள் மூன்று மாதத்தில் முடிவுற்று, குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ள அனைத்து வீடுகளுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்கப்படும்.
மேலும் 50 ஆண்டுகாலமாக இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையத்தில் ரூ.13 கோடியில் குகை வழிப்பாதையாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 
அடுத்த வாரம் குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை திறக்கப்பட உள்ளது.
கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், கிராம பகுதியில் உள்ள  67 சிறு பாசனக்குளங்கள் மற்றும் 367 குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வார ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.  
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் அவர்களி ஒப்புதலுடன் மரக்கன்றுகள் நட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் பசுவைசிவசாமி, கூட்டுறவு மொத்த விற்பணை பண்டகசாலை தலைவர் வை. நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் இன்ஜினியர் கமலக்கண்ணன்,என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com