கரூர் நகரை வந்தடையாத அமாரவதி நீர்: போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

அமராவதி அணையில் நீர் திறந்து 5 நாள்களாகியும் கரூர் நகருக்கு செவ்வாய்க்கிழமை வரை அமாரவதி நீர் வந்தடையவில்லை. கடைமடை வரை தண்ணீர் செல்லாவிட்டால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

அமராவதி அணையில் நீர் திறந்து 5 நாள்களாகியும் கரூர் நகருக்கு செவ்வாய்க்கிழமை வரை அமாரவதி நீர் வந்தடையவில்லை. கடைமடை வரை தண்ணீர் செல்லாவிட்டால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அமராவதி ஆறு கேரள மாநிலம், ஆணைமலை குன்றுகளுக்கு இடையே உற்பத்தியாகி கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 55,000 ஏக்கர் பாசன நிலங்களை வளமடையச் செய்கிறது. அணை கட்டப்படும் முன், ஆற்றின் கடைமடை பகுதியாக இருக்கும் கரூர் மாவட்டத்தின் கடைமடை விவசாயிகள் போதிய தண்ணீரை பெற்றுவந்தனர். 
அமராவதி அணை கட்டப்பட்ட பிறகு, கரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. கடந்த மாதம் அணையின் கொள்ளளவான 90 அடியை நீர் எட்டிய நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த மாதம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 
முதல்நாளில் விநாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டதால் அணையின் கடைமடை பகுதியான திருமுக்கூடலூருக்கு நீர் செல்லவில்லை. இதுகுறித்து, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் அணையில் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து கீழ் மதகுகள் வழியாக பழைய ஆயக்கட்டு பாசன பகுதியான கரூர் மாவட்டத்திற்கு  விநாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேலும் திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயில்(ஏஎம்சி) 440 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. 
ஆனால், தண்ணீர் திறந்து 5 நாள்களாகியும் இதுவரை கரூர் நகரின் திருமாநிலையூர் பகுதிக்கு ஆற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் கரூர் மாவட்ட கடைமடை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால், விவசாயிகளை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாய சங்கப் பிரதிநிதியான ராமலிங்கம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com