5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது சொத்து மதிப்பு உயராது: கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி பேச்சு

 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது சொத்து மதிப்பு ஒரு பைசா கூட உயராது என்றார்
5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது சொத்து மதிப்பு உயராது: கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி பேச்சு


மணப்பாறை:  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது சொத்து மதிப்பு ஒரு பைசா கூட உயராது என்றார் கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி.

மணப்பாறை, பொத்தமேட்டுப்பட்டி, செவலூர், விடத்திலாம்பட்டி, மஞ்சம்பட்டி என நகர்ப்புறப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்வில் பங்கேற்று, பொதுமக்கள் மத்தியில் அவர் மேலும் பேசியது:

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டாலும், எப்போதும் நான் உங்கள் வீட்டு பிள்ளைதான். கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் நன்றி சொல்லக்கூட தொகுதிக்கு வரவில்லை. தொடர்ந்து மக்களைச் சந்திக்கவில்லை. குறைகளைக் கேட்கவில்லை என குற்றச்சாட்டுஇருந்தது.

ஆனால், நான் அப்படியிருக்க மாட்டேன். இந்த முறை நன்றி அறிவிப்பு சொல்வதோடு விட்டுவிடாமல், மாதம் ஒருமுறை மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி பகுதிகளுக்கு வந்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவேன்.

வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை காட்ட வேண்டியது கட்டாயம் என்பதால் நானும் என் சொத்துக் கணக்கை காட்டியுள்ளேன்.  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அடுத்த 5 ஆண்டுகளில் எனது சொத்து மதிப்பு ஒரு பைசா கூட உயராது என்று வாக்குறுதி அளித்திருந்தேன். அதை மக்களிடம் தற்போது உத்திரவாதமாக அளிக்கிறேன் என்றார் ஜோதிமணி.

தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆணையரை சந்தித்து மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்தார். 

நன்றி அறிவிப்பு நிகழ்வில், மதிமுக தேர்தல் பணிச் செயலர் மணவை. தமிழ்மாணிக்கம், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com