தாந்தோணி வாய்க்காலில் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் புகார்

தாந்தோணி வாய்க்கால் 4.5 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக குறைதீர் கூட்டத்தில் வரைபட ஆதாரத்துடன் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


தாந்தோணி வாய்க்கால் 4.5 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக குறைதீர் கூட்டத்தில் வரைபட ஆதாரத்துடன் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சி. ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் கோ. வளர்மதி முன்னிலை வகித்தார். கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு துறைவாரியாக பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு உரிய பதில்கள் தெரிவிக்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த விவாதம்:
ந. சண்முகம்: சணப்பிரட்டி வாய்க்காலில் இருந்து ராயனூர், தாந்தோணிமலை, திருமாநிலையூர் வாய்க்கால்கள் பிரிகின்றன. இதில் 42 அடி அகலம் கொண்ட 5 கி.மீட்டர் நீளமுள்ள தாந்தோணி வாய்க்காலில் தற்போது அரை கிலோ மீட்டர் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நான்கரை கி.மீட்டர் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்க்கால்கள் தூர்வாருவது தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனு அளித்தும் அமராவதி வடிநிலக் கோட்டம் பொய்யான பதிலை தொடர்ந்து அளிக்கிறது. அதிகாரிகளைத் தொடர்புகொண்டால் போன் எண்ணை பிளாக் செய்து போனை எடுப்பதில்லை.
மாவட்ட வருவாய் அலுவலர்: பொதுமக்கள் போனில் அழைத்தால் அதிகாரிகள் பொறுப்பாகப் பதிலளிக்க வேண்டும். மக்கள் சேவை செய்யத்தான் அதிகாரிகள் உள்ளனர். இதுதொடர்பாக கோட்டாட்சியர், வட்டாட்சியர், நில அளவைப்பிரிவு உதவி இயக்குநர் மூலம் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
கழிவு நீர் அடங்கிய இரு பாட்டில்களுடன் வந்திருந்த  உன்னியூர் சுப்ரமணி: காகித நிறுவன கழிவு நீர் கடந்த 15 நாட்களாக புகழூரான் வாய்க்காலில் பயிர்கள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
மாவட்ட வருவாய் அலுவலர்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும்.
ராயனூர் கே. சின்னதுரை: திருமாநிலையூர் விவசாய நிலங்களில் பேருந்து கண்ணாடிகள், சாயக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இப்பகுதியில் இந்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதே தவறு.
மாவட்ட வருவாய் அலுவலர்: பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தால் வேலை கிடைத்துள்ளது. அதைத் தவறு எனக் கூற முடியாது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடவூர் வி.கே. தங்கவேல்: காவிரி உபரிநீரை நீரேற்ற முறையில் பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் கொண்டு செல்லவேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்: இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
மஞ்சநாயக்கன்பட்டி வீ.கோவிந்தராஜன்: பிரதமரின் விவசாய உதவித்தொகை ரூ.6,000 வழங்க கடந்த மார்ச் மாதம் உத்தரவு வந்த நிலையில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. இதற்காக ரூ.3,000 வரை செலவு செய்துவிட்டேன்.
மாவட்ட வருவாய் அலுவலர்: கடவூர் வட்டாட்சியரை அணுகுங்கள். உரிய நடவடிக்கை எடுப்பார்.
கரூர் கோட்டாட்சியர் சந்தியா உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் குளித்தலை கோபாலதேசிகன், கடவூர் வி.கே.தங்கவேல், கீழவெளியூர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com