பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களில், பெண்களை மையப்படுத்திய திட்டங்கள்தான் அதிகம் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களில், பெண்களை மையப்படுத்திய திட்டங்கள்தான் அதிகம் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில், கரூர் மற்றும் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 320 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும், பெண்களை மையப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களே அதிகம். 

பெண் சிசுக்கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதிஉதவி திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், இரு பெண்குழந்தை பாதுகாப்பு நிதியுதவி திட்டம், படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டம், 

பணிக்குச்செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பொருளாதார கடன், அரசு பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்திய திட்டம், அனைத்து பேருந்து நிலையங்களிலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரத்யேக அறை வழங்கிய திட்டம், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என பெண்களின் பாதுகாப்பையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தீட்டிய திட்டங்கள்தான் அதிகம். 

அதுமட்டுமல்லாது, சமுதாய வளைகாப்பு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசு சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கப்படும் மகத்தான திட்டத்தையும் செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்றார் அவர்.     
பங்கேற்பு: நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்நிரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஆர்.காளியப்பபன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் வை. நெடுஞ்செழியன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ் (கரூர்), கண்ணதாசன் (குளித்தலை), மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பேங்க் நடராஜன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்கண்டேயன், கரூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சபிதா (கரூர்), சஹீமா பாத்திமா பேகம் (தான்தோன்றிமலை) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரூ.1.15 கோடியில் உயர் மின்கோபுர விளக்குகள்: 

கரூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் இதுவரை ரூ.1.15 கோடி மதிப்பில் 20 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 

கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகளை சனிக்கிழமை இரவு அவர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது: தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, போக்குவரத்து துறையின் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை  ரூ.1.15 கோடி மதிப்பில் 20 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதமாக குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com