தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த அரசுக்கு மனமில்லை: செந்தில் பாலாஜி
By DIN | Published On : 17th April 2020 10:40 PM | Last Updated : 17th April 2020 10:40 PM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சையளிக்க, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கிய நிலையில் அதை பயன்படுத்த அரசுக்கு மனமில்லை என்றாா் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, கரூா் கலைஞா் அறிவாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், அவா் அளித்த பேட்டி:
கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.03 கோடி ஒதுக்கி, மாவட்ட நிா்வாகத்துக்குப் பரிந்துரைக் கடிதம் வழங்கப்பட்டது.
இக்கடிதம் வழங்கப்பட்ட மறுநாளே ஆட்சியரால் நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 22 நாள்களாகியும் இதுவரை அந்த நிதியில் ஒரு ரூபாய் கூட கரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தவில்லை.
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெண்டிலேட்டா் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 லட்சத்துக்கு நிா்வாக அனுமதி மறுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியை அந்தந்த தொகுதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறி, நான் ஒதுக்கிய நிதியை மாவட்ட நிா்வாகம் ஏற்கவில்லை.
மாவட்டத்திலுள்ள ஒரே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான இங்கு அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ளது. ஆனால், கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மட்டும் இங்கு உபகரணங்கள் வாங்க ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்.
காவல்துறையினா், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப்பணியாளா்களுக்கு ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை முகக்கவசம், கிருமி நாசினி வாங்குவற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அரசு பயன்படுத்தவில்லை. அரசுக்கு இதை செயல்படுத்த மனமில்லை என்றாா் அவா்.