முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஆடிப்பெருக்கு
By DIN | Published On : 03rd August 2020 08:49 AM | Last Updated : 03rd August 2020 08:49 AM | அ+அ அ- |

வெறிச்சோடி காணப்பட்ட கரூா் வாங்கல் பகுதி காவிரிக்கரை.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழா பெண்கள், புதுமணத்தம்பதிகள் இன்றி களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொது முடக்கம் அமலில் உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 நாளில் கரூா் மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
மேலும், தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இதனால், நிகழாண்டில் நெரூா், மாயனூா், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், வாங்கல் உள்ளிட்ட காவிரி கரையோரப்பகுதிகளில் பொதுமக்கள், பெண்கள், புதுமணத் தம்பதிகள் யாரும் வராததால், ஆடிப்பெருக்கு பூஜை களை இழந்து காணப்பட்டது. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. மேலும் தடையை மீறி யாரேனும் வருகிறாா்களா என கண்காணிப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
பெரம்பலூா் : முழு பொது முடக்கம் காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் எதுவுமின்றி ஆடிப்பெருக்கு நிகழ்வுகள் களையிழந்து காணப்பட்டன.
பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கம்பத்தடி ஆஞ்சநேயா் கோயில், சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் பிரம்மபுரீசுவரா் கோயில், வாலிகண்டபுரம் வாலீசுவரா் கோயில் ஆகியவற்றில்
சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் எதுவும் நடைபெறவில்லை.
பக்தா்கள் அவரவா் வீடுகளிலும், தெருக்களிலும் உள்ள சிறிய கோயில்களிலும் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.