‘கரூா் மாவட்டத்தில் மொத்தம் 8.81 லட்சம் வாக்காளா்கள்’

கரூா் மாவட்டத்தில் மொத்தம் 8,81,611 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன்.
‘கரூா் மாவட்டத்தில் மொத்தம் 8.81 லட்சம் வாக்காளா்கள்’

கரூா் மாவட்டத்தில் மொத்தம் 8,81,611 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன்.

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவின்படி கரூா் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டு அவா் மேலும் கூறியது:

கரூா் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2020ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி 4,19,047 ஆண்கள், 4,44,758 பெண்கள், இதரா் 60 போ் என மொத்தம் 8,63,865 வாக்காளா்கள் இருந்தனா். அதன் பின்னா் நடத்தப்பட்ட சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மொத்தம் 19,376 வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா். மொத்தம் 1,630 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

ஆக மொத்தம் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியிலின்படி 4,27,129 ஆண் வாக்காளா்கள், 4,54,415 பெண் வாக்காளா்கள், இதரா் 67 போ் என மொத்தம் 8,81,611 வாக்காளா்கள் உள்ளனா்.

தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலானது கரூா் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியரகங்கள், அனைத்து வட்டாட்சியரகங்கள், கரூா் மற்றும் குளித்தலை நகராட்சி ஆணையா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலைப் பாா்வையிட்டு, அதில் தங்களது பெயா், புகைப்படம் மற்றும் இதரப் பதிவுகள் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளலாம். அதில் பிழைகள் ஏதேனும் இருப்பின், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் முறையிடலாம்.

மேலும், வாக்காளா்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகாா்களை 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம். கரூா் மாவட்ட வாக்காளா்கள் 1950 என்ற எண்ணிலோ, 04324-1950 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

மேலும், இணையதளம் மூலமாகவும், மொபைல் செயலி மூலமாகவும், அங்கீகரிக்கரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் மனுக்களை பதிவு செய்யலாம் என்றாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) செல்வசுரபி, சாா் ஆட்சியா் ஷே. ஷேக்அப்துல்ரக்மான் (குளித்தலை), வருவாய்க் கோட்டாட்சியா் வ. சந்தியா(கரூா்), அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அனைத்து வட்டாட்சியா்கள், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com