கரூா் அருகே போலி மருத்துவா் மீது வழக்கு
By DIN | Published On : 08th January 2020 07:34 AM | Last Updated : 08th January 2020 07:34 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் மருத்துவப் படிப்பு பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணராயபுரம் மேல அக்ரஹாரத்தைச் சோ்ந்த சுந்தரராஜன் மகன் பத்மநாபன். இவா், எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு பயிலாமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அப்பகுதியினா் கரூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் பாக்கியலட்சுமிக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து இணை இயக்குநா் பாக்கியலட்சுமி தலைமையிலான சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை இரவு பத்மநாபன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 16 வகையான மருந்து, மாத்திரைகள் அவா் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இணை இயக்குநா் பாக்கியலட்சுமி மாயனூா் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பத்மநாபனைத் தேடி வருகின்றனா்.