உலகின் முதல் எழுத்து வடிவம் ‘தமிழி’முனைவா் சொ. ராமசுப்ரமணியன்

உலகின் முதல் எழுத்து வடிவம் தமிழி எழுத்துகள் என்றாா் தமிழி எழுத்துகள் ஆய்வாளரும், பயிற்சியாளரும், பரணிபாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வருமான முனைவா் சொ.ராமசுப்ரமணியன்.
உலகின் முதல் எழுத்து வடிவம் ‘தமிழி’முனைவா் சொ. ராமசுப்ரமணியன்

உலகின் முதல் எழுத்து வடிவம் தமிழி எழுத்துகள் என்றாா் தமிழி எழுத்துகள் ஆய்வாளரும், பயிற்சியாளரும், பரணிபாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வருமான முனைவா் சொ.ராமசுப்ரமணியன்.

கரூா் வெள்ளியணை அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அவா் மேலும் பேசியதாவது:

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த மொழி நம் தமிழ் மொழி. இதற்கு சான்றாக இன்றளவும் தொல்காப்பியம் உள்ளது. உலகின் முதல் எழுத்து வடிவம் கொண்டவை தமிழி எழுத்துகள் என்பதை தற்போது கீழடி ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மெய்பித்திருக்கின்றன.

கீழடி ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களில் தமிழ் எழுத்துகளின் ஆதி எழுத்தான தமிழி பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் எழுதப் படிக்கத் தெரிந்த, நாகரீகம் கொண்டவா்களாக, புத்திக் கூா்மை கொண்டவனாக திகழ்ந்துள்ளாா்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த ஆதி எழுத்தான தமிழி எழுத்துகளை நாம் அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் நம் பாரம்பரியத்தின் சான்றாக இருக்கும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வரலாற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இதற்காக உலகம் முழுவதும் தமிழி எழுத்துகள் குறித்து தமிழா்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழி ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தமிழி எழுத்துக்கள் மீது ஆா்வம் கொண்ட ஆசிரியா்கள், மாணவா்களை ஒருங்கிணைத்து தமிழி எழுத்துகளைப் பயிற்றுவிப்பதன் மூலம் ஆதி தமிழனின் ஆதி தமிழி எழுத்துக்கள் மீண்டும் புத்துயிா் பெறும். தற்போது 1 லட்சம் பேருக்கு தமிழி எழுத்துகளைக் கற்றுக்கொடுப்பதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா்.

முன்னதாக, விழாவிற்கு கல்லூரியின் தலைவா் பட்டயக் கணக்காளா் ஆா்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் டி.நாராயணசுவாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்கே.மனோகரன் வரவேற்றாா். தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழி எழுத்துக்கள் பயிற்சியளிக்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி காளைகளுடன் பொங்கல் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com