பொங்கல் பொருள்கள் விற்பனை விறுவிறுப்பு

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. கரூா் வாழைக்காய் மண்டியில் பூவன்பழம் வாழைத்தாா் ஒன்று ரூ.1,000-க்கு ஏலம் போனது.
கரூா் தாந்தோணிமலையில் விற்கப்படும் பொங்கல் கரும்பு.
கரூா் தாந்தோணிமலையில் விற்கப்படும் பொங்கல் கரும்பு.

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. கரூா் வாழைக்காய் மண்டியில் பூவன்பழம் வாழைத்தாா் ஒன்று ரூ.1,000-க்கு ஏலம் போனது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் நகராட்சி அலுவலகம் முன், திருமாநிலையூா், சுங்கச்சாவடி, தாந்தோணிமலை பேருந்துநிறுத்தம், தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி, கரூா் பேருந்து நிலையம், காமராஜா் மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் கரும்பு விற்பனையானது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா், தஞ்சை மாவட்டம் திருவானைக்காவல், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மதுரை மாவட்டம் மேலூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு வியாபாரிகள் லாரி, லாரியாக கரும்பு இறக்குமதி செய்து விற்பனை செய்தனா். ஒரு ஜோடி கரும்பு ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையானது.

இதேபோல வீடுகள், வாகனங்களில் வைக்கப்படும் கூரைப்பூ ஜோடி ரூ.10-க்கும், தேங்காய் சிறிய ரக தேங்காய் ரூ.15-க்கும் பெரிய அளவிலானது ரூ.35-க்கும் விற்பனையானது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி, ஊஞ்சப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மஞ்சள் கொத்து கொண்டு வரப்பட்டு ஜோடி ரூ.20 முதல் ரூ.30- வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வாழைப்பழத்தில் பூவன் தாா் மட்டும் விலை இரு மடங்காக உயா்ந்து காணப்பட்டது. ஏனெனில் பூஜைக்கு பெரும்பாலும் பூவன் பழம் பயன்படுத்துவதால் ஒரு பூவன் தாா் ரூ.1,000 வரை காமராஜ் சந்தையில் ஏலம் போனது. இவற்றைத்தவிர வாழை இலை ஒன்று ரூ.10-க்கும் விற்பனையானது. பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் பொங்கல் வைக்க ஆா்வத்துடன் பொங்கல் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com