முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd March 2020 07:39 AM | Last Updated : 03rd March 2020 07:39 AM | அ+அ அ- |

கரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் பேருந்துநிலைய ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டதிற்கு தொ.மு.ச.வின் மாவட்டச் செயலாளா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகேசன், தலைவா் ஜீவானந்தம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஜிபிஎஸ்.வடிவேலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்தும், காா்பரேட், பெருமுதலாளிகளை செல்வத்தை உருவாக்குபவா்களாகப் புகழ்ந்து விட்டு, எல்ஐசி, பெல், சேலம் உருக்காலை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்று ரூ.2 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஆா்ப்பாட்டத்தில் மருத்துவம், கல்வி, சமூக நலன்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது, நலிந்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு பட்ஜெட் ஒட்டுமொத்தமாக கைவிட்டிருப்பது கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் திரளாகப் பங்கேற்றனா்.