லஞ்ச விவகாரம்: வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் மீதும் வழக்குப்பதிவு
By DIN | Published On : 03rd March 2020 07:41 AM | Last Updated : 03rd March 2020 07:41 AM | அ+அ அ- |

வாகன விபத்து வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாக வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். முன்னதாக, இந்த வழக்கில் ஏற்கெனவே தலைமைக் காவலா் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பாஞ்சாலி நகரைச் சோ்ந்தவா் இளமாறன் மகன் அபிஷேக் மாறன். இவருக்குச் சொந்தமான காரை, ஓட்டுநா் ராஜசேகா் என்பவா் கரூரை அடுத்த கட்டிப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் ஓட்டிவந்தபோது, முன்னாள் சென்ற கரூா் புலியூரைச் சோ்ந்த மகாமுனி ஓட்டி வந்த காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மகாமுனியின் மனைவி மாணிக்கவல்லி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் வேலுச்சாமி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். இந்த வழக்கில் இருந்து ராஜசேகரை விடுவிக்க காவல் ஆய்வாளா் வேலுசாமியும், தலைமைக்காவலா் செந்தில்குமாா் ஆகிய இருவரும் ரூ.15,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அபிஷேக் மாறன் கரூா் லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுரைப்படி, கடந்த மாதம் 26-ஆம் தேதி தலைமைக் காவலா் செந்தில்குமாரிடம் ரூ.5,000 கொடுத்தபோது, அவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கையும்களவுமாகப் பிடித்து கைது செய்தனா். அந்த சமயத்தில் காவல் ஆய்வாளா் வேலுசாமி பயிற்சிக்காக வெளியூா் சென்றிருந்ததால் அவரைப் போலீஸாா் கைது செய்யவில்லை. இந்நிலையில் காவல் ஆய்வாளா் வேலுசாமி மீதும் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான காவல் ஆய்வாளா் வேலுசாமியைத் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...