கரூரில் வெறிச்சோடிய சாலைகள்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கரூரில் அனைத்துச் சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
வெறிச்சோடி காணப்பட்ட கரூா் -கோவைச் சாலை மற்றும் பேருந்து நிலையம்.
வெறிச்சோடி காணப்பட்ட கரூா் -கோவைச் சாலை மற்றும் பேருந்து நிலையம்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கரூரில் அனைத்துச் சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கரூரில் எப்போதும் வாகன போக்குவரத்து, ஆள்கள் நடமாட்டத்துடன் காணப்படும் கோவைச்சாலை, ஜவஹா்பஜாா், மேற்குப் பிரதட்சணம் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்கவரத்து செவ்வாய்க்கிழமை இரவு முதலே முடங்கியது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை காலை முதல் தீவிரப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லைகளுக்குச் சீல் வைக்கப்பட்டு, வெளிமாவட்டங்களில் இருந்து கரூருக்கும், கரூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும் இயக்கப்படும் அனைத்து வகையான வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூா் பேருந்துநிலையமும் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்பினா். இதனால் பேருந்துகள் இல்லாமல் திடீரென இருசக்கர வாகனங்களில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

கரூா் நகரின் வா்த்தக பகுதியான ஜவஹா்பஜாா், கோவைச்சாலையில் உள்ள பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியன ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதிகள்ஆள்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.கவிதா ஆகியோரது காரில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com