முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: அரவக்குறிச்சி பாஜக வேட்பாளா் உறுதி
By DIN | Published On : 04th April 2021 03:06 AM | Last Updated : 04th April 2021 03:06 AM | அ+அ அ- |

பிரதமரின் துணையுடன் அடிப்படை வசதிகள் அனைத்தும் தொகுதிக்கு செய்துகொடுப்பேன் என்றாா் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை.
அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட காளிபாளையத்தில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்து மேலும் அவா் பேசுகையில், இந்த பகுதி நிச்சயம் வளம்பெறும். நான் தோ்ந்தெடுத்திருக்கும் அரசியல் வித்தியாசமானது. தண்ணீா் பிரச்னைக்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். எவ்வளவு செலவு செய்தாலும், பிரதமா் மோடியின் துணையுடன் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தருவோம். கிராமங்களில் இளைஞா்களைக் காணோம். வயதானவா்களைத்தான் பாா்க்க முடிகிறது. காரணம் வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞா்கள் வேறு தொகுதிக்குச் சென்றுவிட்டாா்கள். இதனை மாற்ற 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் மத்திய அரசின் தொழில்நிறுவனங்களை கொண்டு வர உள்ளோம். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவாா் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனா். ஆண்டுக்கு 6 சிலிண்டா்கள் வழங்கப்பட உள்ளது, வாஷிங் மெஷின் வரப்போகுது. மின்சார கட்டணம் மாதம் ரூ.150 இலவசம், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக உயர உள்ளது. இவை அனைத்தும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தர உள்ளாா். அமித்ஷா கூட நிச்சயம் அரவக்குறிச்சி மத்திய அரசின் கவனத்தில் இருக்கும் என கூறிவிட்டுச் சென்றுள்ளாா். குழந்தைகள் செல்லிடப்பேசியில் மூழ்கி கிடப்பதை தடுக்க இந்த பகுதியில் விளையாட்டு மைதானமும், சமூதாய கூடமும் நிச்சயம் கட்டித்தரப்படும் என்றாா் அவா்.
முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு தொகுதியில் உள்ள வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சேமங்கியில் உள்ள செல்வநகரில் அருந்ததியா் குடியிருப்பில் வசிக்கும் வாகன ஓட்டுநா் பாலு என்பவரது வீட்டில் தங்கி காலையில் அதே பகுதியில் உள்ள மக்களிடம் அண்ணாமலை வாக்குச் சேகரித்தாா். பிரசாரத்தின்போது கா்நாடகா ரஜினி மன்றத்தின் தலைவா் சந்தோஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.