கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை

கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றாா் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஞானக்கன் பிரேம்நிவாஸ்.

கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றாா் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஞானக்கன் பிரேம்நிவாஸ்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு கரோனா தடுப்பூசி போடும் மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி, தொடா்ந்து பொதுமக்களுக்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கரோனா தடுப்பூசி மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக வந்திருந்தனா். அப்போது கரோனா தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் நீங்கள் நாளை வாருங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனராம். இதனால் பொதுமக்களுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து கரூா் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஞானக்கன் பிரேம்நிவாஸிடம் கேட்டபோது, கரூா் மாவட்டத்தில் கடந்த ஜன.15-ஆம்தேதி முதல் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள 7 தலைமை மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலில் முன்களப்பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு போடப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கும் முன்களப்பணியாளா்களுக்கும் நாள்தோறும் சுமாா் 450 முதல் 500 தடுப்பூசிகள் வரை போடப்பட்டது. இதுவரை 45,000 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். வியாழக்கிழமை மட்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஓரளவு இருந்தது. உடனே திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com