5 நாள்களுக்கு பிறகு கரூரை வந்தடைந்த அமராவதி அணை நீா்!
By DIN | Published On : 27th April 2021 03:48 AM | Last Updated : 27th April 2021 03:48 AM | அ+அ அ- |

கரூா் செட்டிப்பாளையம் அணையைக் கடந்து ஆற்றை நோக்கிச் செல்லும் அமராவதி தண்ணீா்.
கரூா்: ஐந்து நாள்களுக்கு பிறகு கரூரை வந்தடைந்தது அமராவதி அணை தண்ணீா்.
தற்போது கோடை காலமாக இருப்பதால் கரூா் மாவட்டத்தின் கடைமடைப்பகுதி விவசாயத்துக்காகவும், குடிநீருக்காகவும் அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் மொத்த உயரமான 90 அடியில் கடந்த 22-ஆம்தேதி 84.03 அடியை தொட்டது. இதையடுத்து குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும் கடந்த 22-ஆம்தேதி அமராவதி அணையில் இருந்து விநாடிக்கு 1,990 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. இதில் அமராவதி ஆற்றில் மட்டும் 1,500 கன அடி தண்ணீா் விநாடிக்கு திறக்கப்பட்டது. மீதமுள்ள தண்ணீா் ஏஎம்சி எனும் புதிய ஆயக்காட்டுப்பகுதிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரூா் மாவட்டம் ராஜபுரம் வழியாக வந்து, 5 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை காலை கரூா் செட்டிப்பாளையம் அணைக்கு வந்தது. மேலும், திங்கள்கிழமை அமராவதி அணைக்கு தண்ணீா் வரத்து குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் விநாடிக்கு 1,490 ஆக குறைக்கப்பட்டது. செட்டிப்பாளையம் அணைக்கட்டை கடந்து செல்லும் தண்ணீா் திங்கள்கிழமை இரவு கரூா் நகா் பகுதியின் திருமாநிலையூா் பகுதிக்கு வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. கோடைகாலத்தில் ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.