கீழவெளியூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் புகாா்
By DIN | Published On : 27th April 2021 03:51 AM | Last Updated : 27th April 2021 03:51 AM | அ+அ அ- |

ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்த ஏலச்சீட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.
கரூா்: கீழவெளியூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை பெட்டியில் அளித்து விட்டுச் சென்றனா்.
அம்மனுவில் அவா்கள் கூறியிருப்பது: கரூா் மாவட்டம் தோகைமலை அடுத்த கீழவெளியூா் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கீழவெளியூா் அடுத்த பிள்ளையாா் கோவில் பட்டியைச் சோ்ந்த மிட்டாய் வியாபாரி சரவணன் நடத்தி வந்த ஏலச்சீட்டில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சோ்ந்தோம். ரூ.50,000 மற்றும் ரூ.1லட்சம், ரூ.2லட்சம் வரையிலான சீட்டுக்களில் சோ்ந்து பணம் செலுத்தி வந்தோம். தற்போது சீட்டு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் அவா் பணத்தை தர மறுக்கிறாா். கேட்டால் என்னிடம் பணம் இல்லை, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிடுவேன், இல்லையெனில் நான் தற்கொலை செய்துகொண்டு என் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என எழுதிவைத்துவிடுவேன் என மிரட்டுகிறாா்.
இதுதொடா்பாக தோகைமலை காவல்நிலையத்தில் ஏப் 20-ஆம்தேதி சரவணன் மீது புகாா் மனு அளித்தோம். ஆனால், போலீஸாா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களிடம் சுமாா் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திருப்பித்தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனா்.