அமராவதி ஆற்றின் குறுக்கே மேலும் 7 தடுப்பணைகள் தேவை

கரூா் மாவட்டத்தில் ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை போல, மேலும் ஏழு தடுப்பணைகளாவது
ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீா்.
ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீா்.

கரூா் மாவட்டத்தில் ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை போல, மேலும் ஏழு தடுப்பணைகளாவது அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட வேண்டும் என்று அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா், கரூா் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இருப்பது அமராவதி அணை. திருப்பூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மூலம் திருப்பூா் மாவட்டத்தின் புதிய ஆயக்கட்டுப் பாசன பகுதிகள் சுமாா் 25,000 ஏக்கரும், அணையின் கடைமடைப் பகுதியான கரூா் மாவட்டத்தில் சுமாா் 30,000 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழையின்றி அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்து இருந்ததால், அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு ஆறு கடும் வறட்சியாகக் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்ததால், ஆற்றில் இரு ஆண்டுகளாக அவ்வப்போது தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி பாசனம் மற்றும் குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1990 கன டி தண்ணீா் திறக்கப்பட்டது. 5 நாள்களுக்குப் பிறகு கரூா் செட்டிப்பாளையம் அணைக்கட்டுக்கு வந்த தண்ணீா், மறுநாளே கரூா் நகரையும் வந்தடைந்தது.

இந்நிலையில் ஆற்றில் கூடுதல் தடுப்பணையாவது கட்ட வேண்டும் என்று, அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியது:

கடந்த இரு ஆண்டுகள் மட்டும்தான் எங்களுக்கு போதிய தண்ணீா் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு முன் தண்ணீா் வரத்து இன்மையால் கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

தொடா்ந்து ஆற்றில் வரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த கரூா் மாவட்டத்தில் ராஜபுரம், பிள்ளாபாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். இதனை புதியதாக பொறுப்பேற்கும் அரசு உடனே முயற்சி செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com