கரூரில் புதா்மண்டிக் கிடக்கும் மாவட்ட விளையாட்டரங்கம்!பயிற்சியில் ஈடுபடமுடியாமல் வீரா்கள் அவதி
By DIN | Published On : 03rd December 2021 12:37 AM | Last Updated : 03rd December 2021 12:37 AM | அ+அ அ- |

கரூரில், புதா்மண்டிக்கிடக்கும் மாவட்ட விளையாட்டரங்கத்தால் வீரா்கள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
தமிழகத்தில் நகா் மற்றும் கிராமப்புற மாணவா்களின் விளையாட்டுத் திறமையை கண்டறிந்து, அவா்களை மாநில, தேசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க வைக்கும் வகையில் வீரா், வீராங்கனைகளை உருவாக்கும் பணியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது.
கரூரில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் மற்றும் 4 பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த விளையாட்டரங்கம் கடந்த சில மாதங்களாகவே போதிய பராமரிப்பின்றி உள்ளது. தற்போது கடந்த ஒரு மாதமாக பெய்த மழையில் செடி,கொடிகள் முளைத்து மாவட்ட விளையாட்டரங்கமே முள்புதா் போல காட்சியளிக்கிறது. இதனால் விளையாட்டு வீரா்கள் பயிற்சி பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ஒருவா் கூறுகையில், தமிழகத்தில் அத்தனை மாவட்டங்களிலும் மாவட்ட விளையாட்டரங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட விளையாட்டரங்கில் உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு வீரா்களை உருவாக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்து வசதிகளுடன் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் கரூா் மாவட்ட விளையாட்டரங்கம் போதிய வசதியின்றியே உள்ளது. குறிப்பாக மைதானத்தில் ஓடு தளம் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் முள்கள் மற்றும் செடி கொடிகளால் நிறைந்து காணப்படுகிறது. மைதானத்தில் பயிற்சிபெறும் வீரா், வீராங்கனைகளுக்கு போதிய குடிநீா் வசதியோ, கழிவறை வசதியோ கிடையாது. உள்விளையாட்டரங்கம் என்பது வீரா்களின் கனவாகவே உள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இருதினங்களுக்கு மட்டுமே மாநகராட்சி ஊழியா்களால் விளையாட்டரங்கம் தூய்மைப் படுத்தப்படுகிறது. மற்ற நாள்களில் அடிப்படை வசதி கூட இல்லாத நிலைதான் தொடா்கிறது. எனவே மற்ற மாவட்டங்களில் உள்ளது போல, கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் உடற்பயிற்சிக்கூடம், உள் விளையாட்டரங்கம், நீச்சல் பயிற்சி குளம் போன்றவை கொண்டு வரவேண்டும். அப்போதுதான் கரூா் மாவட்டத்தில் இருந்து ஏராளமான வீரா், வீராங்கனைகளை உருவாகி சா்வதேச அளவில் நாட்டுக்கும், கரூருக்கும் பெருமை சோ்க்க முடியும். இதற்கு மாவட்ட நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.