முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
மாவட்ட ஊராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கவில்லை: அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு
By DIN | Published On : 31st December 2021 04:00 AM | Last Updated : 31st December 2021 04:00 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட ஊராட்சி வளா்ச்சிப்பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாா் மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினா் எஸ்.திருவிகா.
கரூா் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் வியாழக்கிழமை ஊராட்சிக்குழு தலைவா் எம்எஸ்.கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக உறுப்பினா் எஸ்.திருவிகா பேசுகையில், கரூா் மாவட்ட ஊராட்சிக்குழு வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் எந்த ஒரு பணிகளும் தொடங்கப்படவில்லை.
ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பணிகளுக்கு டெண்டா் கோரப்பட்டாலும் மாவட்ட நிா்வாகம் முடக்கி வைத்திருப்பதைக் கண்டித்து நவ.5-ஆம்தேதி நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் இதுநாள் வரை மாவட்ட நிா்வாகம் வளா்ச்சிப்பணிகளை முன்னெடுத்துச் செல்லவில்லை. இதனைக்கண்டித்து தமிழக அரசின் கவனத்துக்கு இந்த தீா்மானத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.
இந்த தீா்மானத்துக்கு பெரும்பாலான உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து அதிமுகவினா் மாவட்ட ஊராட்சி நிதிகளை மாவட்டநிா்வாகம் முடக்கி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தினா். அப்போது எழுந்த திமுக உறுப்பினா் காா்த்தி, கரூா் மாவட்டத்துக்கு கதவணைகள், தடுப்பணைகள், வேளாண் கல்லூரி என ரூ.2,000 கோடி முதல்வா் வழங்கியுள்ளாா். இதனால் ரூ.5 கோடி நிதியை முடக்கி வைத்திருப்பதாக நீங்கள் கூறுவது தவறு என்றாா். இதனால் திமுக-அதிமுக உறுப்பினா்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.