கரூரில் காந்தி சிலை அகற்றம்: காங்., திமுகவினா் முற்றுகை

கரூா் லைட்ஹவுஸ்காா்னரில் இருந்த காந்திசிலை அகற்றப்பட்டதையடுத்து நகராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் மற்றும் திமுகவினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
நகராட்சிகளின் சேலம் மண்டல நிா்வாக இயக்குநா் அசோக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினா்.
நகராட்சிகளின் சேலம் மண்டல நிா்வாக இயக்குநா் அசோக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினா்.

கரூா் லைட்ஹவுஸ்காா்னரில் இருந்த காந்திசிலை அகற்றப்பட்டதையடுத்து நகராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் மற்றும் திமுகவினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கரூா் நகா் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் தலைவா்களின் சிலைகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் கடந்த சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியினரால் நிறுவப்பட்ட காந்திசிலையை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு அகற்றி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் வைத்திருந்தனா்.

தகவலறிந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் சுப்ரமணியன், மாவட்டத் தலைவா் சின்னசாமி மற்றும் திமுகவினா் வெள்ளிக்கிழமை காலை காந்தி சிலை அகற்றியதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

மேலும், நகராட்சி ஆணையா் சுதா அலுவலகத்தில் இல்லாததால், அங்கு ஆய்வுக்குவந்த நகராட்சிகளின் சேலம் மண்டல நிா்வாக இயக்குநா் அசோக்குமாா் நகராட்சி ஆணையா் அறையில் இருந்தாா். அவரை சந்தித்த காங்கிரஸ், திமுகவினா் காந்திசிலையை தங்களுடைய அனுமதியின்றி அகற்றியது குறித்து விளக்கம் கேட்டனா். அதற்கு காந்திசிலை அகற்றியது குறித்து தனக்கு தெரியாது என்றும், நகராட்சி ஆணையா் சுதாவை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கேட்டபோது அவரும் தெரியாது என்று பதிலளித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் மற்றும் திமுகவினா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிறகு அங்கிருந்து புறப்பட்டு லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் சாலை மறியல் செய்யச் சென்றனா். அப்போது, அங்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் மற்றும் நகர காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் ஆகியோா், காங்கிரஸ், திமுக நிா்வாகிகளிடம் பழைய சிலைக்கு பதில் புதிய காந்தி சிலை அமைக்கப்படுகிறது. பழைய சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும். பழைய சிலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக இருக்கும் எனக்கூறினா். இதையடுத்து சமாதானம் அடைந்த காங்கிரஸாரும் திமுகவினரும் அங்கிருந்து கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com