கரூா் மாவட்டத்தில் புதிதாக 242 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றாா் ஆட்சியா் சு.மலா்விழி.
கரூா் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:
மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் மொத்தம் 1,032 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
1050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் முறையே 59, 94, 44, 45 என மொத்தமாக 242 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
4 தொகுதிகளில் 37 இடங்களில் தோ்தல் பொதுக் கூட்டங்கள் நடத்த இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கரூா் என்.எஸ். பாலசுப்ரமணியன், குளித்தலை ஷேக்அப்துல் ரகுமான், கிருஷ்ணராயபுரம் தட்சிணாமூா்த்தி , அரவக்குறிச்சி தவசெல்வம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)அருள், தோ்தல் வட்டாட்சியா் பிரபு மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.