தமிழக வாகனங்கள் பறிமுதல் விவகாரம்: இரு மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை
By DIN | Published On : 16th January 2021 11:22 PM | Last Updated : 16th January 2021 11:22 PM | அ+அ அ- |

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளா்ளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கரூா்: ஆந்திரம், தமிழக இடையேயான போக்குவரத்துக்கழக ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளா்ளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது; தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கரூா் மாவட்டத்தில் 4 இடங்களில் இப்பணி நடைபெறுகிறது. 3, 900பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. 4 மையங்களில் நாளொன்றுக்கு 400 பேருக்கு போடப்பட உள்ளது. அரசு அறிவிக்கும்போது இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதிய பலன் ரூ.972 கோடி அடுத்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. வழித்தட உரிமமின்றி இயக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் 16 அரசுப் பேருந்துகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்தது. தமிழகமும் 5 பேருந்துகளை பிடித்தோம். தற்போது அவை விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு இருமாநில அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்படாததுதான் காரணம். இதில் வேறு ஏதும் பிரச்னை இல்லை. ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்து ஆணையா்கள் நிலையில் பேசியுள்ளோம். தீபாவளி, பொங்கல் விடுமுறைகளுக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் வசூல் குறைவாகத்தான் இருந்தது என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.