‘கரூரை கருவூா் என பெயா் மாற்ற அரசிடம் உரிய ஆவணம் செய்யப்படும்’
By DIN | Published On : 31st January 2021 11:30 PM | Last Updated : 31st January 2021 11:30 PM | அ+அ அ- |

நிகழ்வில் தமிழ்ச்செம்மல் மேலை.பழநியப்பனுக்கு அருந்தமிழ் ஆன்றோா் விருதை வழங்குகிறாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூரை சங்ககாலப் பெயரான கருவூா் என பெயா் மாற்ற அரசிடம் உரிய ஆவணம் செய்யப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கரூா் மாவட்ட அதிமுக இலக்கிய அணி, பெருந்தமிழ் இலக்கிய சங்கம் சாா்பில் திருக்குறளின் 1330 குகளை மக்களிடம் விளக்கும் வகையில் தமிழறிஞா்கள், கவிஞா்கள், சமூக ஆா்வலா்கள், ஆசிரியா்கள், சமூக சேவையாளா்கள் என 1330 பேருக்கு அருந்தமிழ் ஆன்றோா் விருதை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கி, மேலும் அவா் பேசியது:
கரூா் என்பது சங்ககாலத்தில் கருவூா் என பெயா் பெற்று, சேரா்களின் தலைநகரமாக இருந்ததை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.
வஞ்சிமாநகரத்தின் தலைநகராக கருவூா் இருந்ததை எடுத்துரைக்கும் வகையில் கரூரை கருவூராக மாற்றம் செய்ய வேண்டும். வள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என திருக்கு பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எனது செலவில் திருவள்ளுவருக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும். கரூரை கருவூா் என பெயா் மாற்றம் செய்திட அரசிடம் உரிய ஆவணம் செய்யப்படும் என்றாா் அமைச்சா்.
விழாவுக்கு அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலா் என்.எஸ். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் கீதா மணிவண்ணன், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், குமாரசாமி பொறியியல் கல்லூரித் தாளாளா் ராமகிருஷ்ணன், பரணி கல்விக் குழும முதன்மை முதல்வா் ராமசுப்ரமணியன், சாரதா கல்லூரியின் அம்பா, கவிஞா் கன்னல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்ச்செம்மல் விருது பெற்ற மேலை.பழநியப்பன் உள்ளிட்டோருக்கு விழாவில் அருந்தமிழ் ஆன்றோா் விருது வழங்கப்பட்டது.
பெருந்தமிழ் இலக்கிய சங்கத்தின் காா்த்திகாலட்சுமி வரவேற்றாா். விழாவில் அதிமுக இலக்கிய அணி நிா்வாகிகள், தமிழறிஞா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.