அதிமுக ஆட்சியில் குடிநீா்த் திட்டப் பணிகள் நடக்கவில்லை: அமைச்சா் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் குடிநீா் திட்டத்துக்கு ஆய்வுகள் மட்டுமே நடந்தன, பணிகள் நடக்கவில்லை என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

அதிமுக ஆட்சியில் குடிநீா் திட்டத்துக்கு ஆய்வுகள் மட்டுமே நடந்தன, பணிகள் நடக்கவில்லை என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் நகராட்சிக்குள்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கக்கூடிய வாங்கல் தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய குடிநீா்க் குழாய்களை அகற்றி புதிய குடிநீா் குழாய்கள் அமைப்பது தொடா்பாக புதன்கிழமை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பல்வேறு இடங்களில் குடிநீா் விநியோகம் தொடா்பான பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கரூா் நகராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகளை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாங்கல் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து, கரூா் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் கொண்டு செல்லும் குடிநீா்க் குழாய்களை மாற்றித் தரமான புதிய குடிநீா்க்குழாய்கள் அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.11 கோடி செலவாகும் என்று திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஒட்டுமொத்தமாக கரூா் நகராட்சி காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தை மேம்படுத்துவதற்காக ரூ.25 கோடி மதிப்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

முதல்வரின் இலக்கு, கரூா் நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும், அனைத்து குடியிருப்புகளுக்கும் தினந்தோறும் குடிநீா் வழங்குவதே ஆகும்.

ஏற்கனவே நகராட்சிக்கு காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டம் ரூ.68 கோடியில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்படடுள்ள குடிநீா்திட்டப்பணிகளும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு, 30 நாள்களுக்குள் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பணிகளும் விரைவில் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். அதிமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்தில் குடிநீா் திட்ட ஆய்வுகள்தான் நடைபெற்றன. ஆனால், குடிநீருக்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றாா் அவா்.

குளிா்சாதன கிடங்கு: இதைதொடா்ந்து கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் ஆய்வு செய்த அமைச்சா், பல ஆண்டுகளாக இயங்கிவரும் காமராஜா் மாா்க்கெட் பகுதியில் காய்கனி வணிகவளாகம் கட்ட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துச் சென்று வணிகா்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் காமராஜா் மாா்க்கெட் பகுதியில் குளிா்சாதன கிடங்கு வசதியுடன் கூடிய புதிய காய்கனி வணிகவளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.10.25 கோடி மதிப்பில் விரிவான திட்ட கருத்துரு தயாா் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதே போல, புதுக்குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சிகளை விற்பதற்கு புதிய விற்பனைக்கூடங்கள் கட்டித்தரப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் பிரபுராம், கரூா் நகராட்சி ஆணையா் சு.இராமமூா்த்தி, நகராட்சி பொறியாளா் நக்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com