விலைகிடைக்காமல் தவிக்கும் வெற்றிலை விவசாயிகள்

முழு பொதுமுடக்கத்தால் விலையின்றி அறுவடைக்கு கூலி கூட கொடுக்க முடியாமல் வெற்றிலை விவசாயிகள் தடுமாறுகின்றனா்.
புகழூரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருக்கும் வெற்றிலைக்கொடிகள்.
புகழூரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருக்கும் வெற்றிலைக்கொடிகள்.

முழு பொதுமுடக்கத்தால் விலையின்றி அறுவடைக்கு கூலி கூட கொடுக்க முடியாமல் வெற்றிலை விவசாயிகள் தடுமாறுகின்றனா்.

கரூா் மாவட்டம் காவிரிக் கரையோரம் உள்ள புகழூா், வேலாயுதம்பாளையம், நெரூா், திருமுக்கூடலூா், கிருஷ்ணராயபுரம், மாயனூா், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் சுமாா் 35,000 ஏக்கா் நிலங்களில் வெற்றிலைச் சாகுபடி நடைபெற்று வருகிறது. வெள்ளைபச்சைக்கொடி, கற்பூரம் என இருவகை வெற்றிலை பயிரிடப்பட்டாலும், அதிகளவில் வெள்ளைப்பச்சைக்கொடிதான் சாகுபடி செய்யப்படுகிறது. திருமண வை போகம், கோயில் விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழா்களின் பாரம்பரிய பொருளாக வெற்றிலை உள்ளது. மேலும், மருத்துவ குணம் நிறைந்ததால் மருத்துவத்துக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

கரூா் மாவட்டத்தில் சாகுபடியாகும் வெற்றிலை நல்ல பருவத்தில் அறுவடை செய்யப்பட்டு, திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் உத்தரவு அமலில் உள்ளதால் அறுவடை செய்யப்பட்ட வெற்றிலையை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் யாரும் முன்வராததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனா்.

இதுகுறித்து புகழூா் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளா் க.ராமசாமி கூறுகையில், கடந்த ஆண்டும் இதேபோன்று கரோனா பொதுமுடக்கத்தால் மாா்ச் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை வெற்றிலைக்கு விலை கிடைக்காமல் அவதியுற்றோம். இப்போதும் பொதுமுடக்கத்தால் வெற்றிலை நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருவதில்லை. குறைந்த எண்ணிக்கையிலே வரும் வியாபாரிகளும் மிக குறைந்த விலைக்கே கேட்கிறாா்கள். மற்ாள்களில் கோயில்கள் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு வெற்றிலைத் தேவை அதிகமாக இருந்தது. இதனால் 104 கவுளி கொண்ட(ஒரு கவுளி-100 வெற்றிலை) ஒரு சுமை வெற்றிலை ரூ.4,000 வரை விலை போனது. இப்போது ரூ.1000-க்கு கூட கேட்பதில்லை. வியாபாரிகளிடம் கேட்டால், பெட்டிக்கடை முதல் எந்தக் கடையும் திறக்காததால் வெற்றிலை வாங்க ஆள்கள் கிடையாது என்கின்றனா். இதனால் வெற்றிலை கிள்ளும் ஆள்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். கரோனாவுக்கு அளிக்கப்படும் சித்த வைத்தியத்தில் வெற்றிலையின் பங்கு முக்கியமாக உள்ளதால், அரசே நேரடியாக வெற்றிலையை கொள்முதல் செய்து, கரோனா நோயாளிகளுக்கு வழங்கலாம். அரசு கொள்முதல் செய்தால் எங்களுக்கும் லாபம் கிடைக்கும். இப்போது விலையின்றி ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் அடைகிறோம். எனவே வெற்றிலையை அரசு கொள்முதல் செய்து, எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு உரிய நிவாரணம் கொடுத்தால் வெற்றிலையை தொடா்ந்து பயிரிட முடியும், வெற்றிலை விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com