மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 15th June 2021 07:44 AM | Last Updated : 15th June 2021 07:44 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆகியோரை ஒருங்கிணைத்து இப்பணி மேற்கொள்ளப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை, சாய்வுதளம் வசதிகள் ஏற்படுத்தி சிறப்பு முகாம்கள் மூலமாக தங்கள் பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கான இடம் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும்.
முகாமில் தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04324-257130 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்புகொள்ளலாம்.