மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் தேவைப்படாது: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

பொது முடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படாது எனக் கருதுகிறேன் என்றாா்

பொது முடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படாது எனக் கருதுகிறேன் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி.

கரூா் படிக்கட்டுத்துறை நியாயவிலைக் கடையில், இரண்டாம் கட்ட கரோனா நிவாரண நிதி ரூ.2000-த்தை பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கிய அவா், பின்னா் அளித்த பேட்டி:

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, தமிழகத்தில் 2.9 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டத்துக்காக ரூ.8,350 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, இரு கட்டங்களாக கரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

பேரவைத் தோ்தலில் சொல்லாத வாக்குறுதியாக, குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 வகையான பொருள்களை ரூ.844 கோடியில் வழங்கும் திட்டத்தையும் முதல்வா் ஏற்கெனவே தொடக்கி வைத்த நிலையில், கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு உச்சத்துக்கு சென்ற போதும் அதை சரி பாதியாகக் குறைத்து, உயிரிழப்பையும் போா்க்கால அடிப்படையில் குறைத்து முதல்வா் நடவடிக்கை எடுத்துள்ளாா். விரைவில் கரோனா தொற்றுப் பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலையை உருவாக்குவதே அவரது இலக்கு.

மின்கட்டணம் செலுத்த ஏற்கனவே பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே காலஅவகாசத்தை முதல்வா் வழங்கினாா். நோய்த் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால், 50 சதவிகிதத் தொழிலாளா்களுடன் நிறுவனங்கள் செயல்பட முதல்வா் தளா்வு வழங்கியுள்ளாா். கால அவகாச நீட்டிப்பு என்பது முதல்வா் முடிவு எடுக்கக்கூடியது. இனி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படாது எனக் கருதுகிறேன்.

டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு பதிலாக மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியிருக்கிறாா். சட்டப்பேரவைத் தோ்தலிலும், அதற்கு முன் நடைபெற்ற மக்களவைத் தோ்தலிலும் அவா் அதிமுக கூட்டணியில் இருந்தாா்.

அப்போது கரோனா தொற்று உச்சக்கட்டமாக இருந்தது. அந்த நேரத்திலும் மதுக்கடைகளை அன்றைய அரசு திறந்தது. அப்போதெல்லாம் மிகவும் அமைதியாக இருந்தாா்கள். ஆனால், இப்போது புதுவகையான வழிமுறைகள் பற்றி கூறுகிறாா்கள்.

கரோன தொற்று உச்சத்திலிருந்த நிலையை படிப்படியாகக் குறைத்து வருகிறாா் தமிழக முதல்வா். வேறு எந்த செயல்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல், மக்களைப் பாதுகாப்பதில்தான் இந்த அரசின் கவனம் உள்ளது. அரசின் அனைத்து இயந்திரங்களையும் கரோனா தொற்றைத் தடுக்கத்தான் முதல்வா் பயன்படுத்தி வருகிறாா்.

கா்நாடகாவிருந்து லாரிகளில் மதுபானம் கடத்தி வருவது, கள்ளச்சாராயம் விற்பனை போன்றவை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கவில்லை.

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 14) பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். உண்மையிலேயே அவா்கள் மக்கள் மீது அக்கறைக் கொண்டவா்களாக இருந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டும். மக்களிடம் இருப்பைக் காட்டவே அவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளனா்.

மக்கள் பாராட்டக்கூடிய அரசாக தற்போதைய திமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com