கரூரில் கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு நிவாரண நிதி: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்
By DIN | Published On : 29th June 2021 03:41 AM | Last Updated : 29th June 2021 03:41 AM | அ+அ அ- |

நிகழ்வில் ஒருவருக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருள்களின் தொகுப்பை வழங்குகிறாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா்: கரூா் மாவட்டத்தில் கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் என 320 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண நிதி மற்றும் 15 வகையான மளிகைப் பொருள்களின் தொகுப்பை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
நிகழ்வுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம், ஆா். இளங்கோ, க.சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் அமைச்சா் செந்தில்பாலாஜி பேசியது:
முந்தைய ஆட்சிக்காலத்தில் பொது முடக்கம் என்றால் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். இல்லையெனில் அனைத்துப் பகுதிகளிலும் தளா்வு அறிவிக்கப்படும்.
ஆனால் முதல்வா் மு.க.ஸ்டாலின், தற்போது நோய்த்தொற்றுப் பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்து, பொது முடக்கத்தை அமல்படுத்தினாா்.
மாவட்டத்தில் எந்தெந்த திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டுமோ அக்கோயிலுக்கான கருத்துகளைக் கேட்டறிந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், நகராட்சி ஆணையா் சுதா, இந்துசமய
அறநிலையத்துறை இணை ஆணையா் நடராஜன், உதவிஆணையா் சூரியநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், உள்ளிட்ட அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.