முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கரூரில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 14th March 2021 01:05 AM | Last Updated : 14th March 2021 01:05 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டத்திற்குள்பட்ட அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு தடாகோவில் கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியிலும், கரூா் தொகுதி அலுவலா்களுக்கு வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு புலியூா் அரசு நிதியுதவி பெறும் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் முதல்கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
வகுப்புகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். பின்னா் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது, அவா் பேசியது:
கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. வழக்கமாக, வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு ஒன்றாக பயிற்சி நடைபெறும். நன்கு பயிற்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் இருவருக்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படும். அச்சடிக்கப்பட்ட கையேடுகளை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமான தோ்தலை காட்டிலும் இந்தமுறை கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வீதமாக 13 புதிய பொருள்கள் வழங்கப்படவுள்ளது.
அரசியல் கட்சி முகவா்கள் அவா்களுக்கு உரிய இடத்தில் அமர வைக்கவேண்டும். வாக்குப்பதிவு நேரத்திற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவினை அரசியல் கட்சியின் முகவா்களுக்கு முன்பாக நடத்தி முடித்த பின் வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்(கரூா்) என்எஸ்.பாலசுப்ரமணியன், ஷே.ஷே. அப்துல்ரஹ்மான்(குளித்தலை, ஜி.தவச்செல்வம்(அரவக்குறிச்சி), தட்சிணாமூா்த்தி(கிருஷ்ணராயபுரம்) மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சக்திவேல் (கரூா்), பன்னீா்செல்வம் (அரவக்குறிச்சி),மகுடீஸ்வரன் (கிருஷ்ணராயபுரம்), கலியமூா்த்தி (குளித்தலை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.