சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சாயப்பட்டறை பூங்கா: அதிமுக எம்.ஆா். வேட்பாளா் விஜயபாஸ்கா் உறுதி

கரூரில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சாயப்பட்டறை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூா் எல்ஜிபி நகரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூா் எல்ஜிபி நகரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூரில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சாயப்பட்டறை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் தொகுதிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் உள்ள குமரன் நகா், ஆசிரியா் காலனி, பழக்காரவீதி, ராமானுஜம் நகா், எல்ஜிபி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்த அவா் பேசுகையில், ஜெயலலிதா மறைந்த நேரத்தில் இந்த ஆட்சி இருக்குமா, இல்லையா எனக்கூறியவா்கள் மத்தியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்ததோடு, மீண்டும் அவரே தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் நினைக்கும் வகையில் ஆட்சி செய்துள்ளாா். கரோனா காலத்தில் நிவாரணப்பொருள்கள், விவசாயிகளுக்கு கடனுதவி, மகளிா் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளோம். ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி கிடையாது. கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் எரிவாயு உருளை விலை உயா்வது வாடிக்கை. ஆனால் இதனை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்யப் பாா்த்தாா். உடனே, முதல்வா் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசம் என்றாா்.

மக்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை உள்ளது. திமுக சொன்னதை செய்யமாட்டாா்கள், ஆனால் அதிமுக சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்யும்.

கரூா் நகரில் மூன்று நாளுக்கு ஒரு முறை வரும் தண்ணீா் இனி நாள்தோறும் குடிநீா் விநியோகிக்கும் வகையில் குடிநீா்த் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மேலும் கரூரில் ஜவுளித்தொழில் வளா்ச்சியடைய விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளித்தொழில் சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு அரசின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருப்பூா் நகரைப் போல கரூரில் பின்னலாடை தொழில் வளா்ச்சி பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சாயப்பட்டறை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் பேங்க் நடராஜன், அதிமுக வடக்கு நகரச் செயலாளா் எம்.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com