கரூா் மாவட்ட 4 தொகுதிகளுக்குஇன்று வாக்கு எண்ணிக்கை

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கரூா்: கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி), அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் ஏப். 6-ஆம்தேதி தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 40 வேட்பாளா்களும், கரூா் தொகுதியில் 77 வேட்பாளா்களும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 26 வேட்பாளா்களும், குளித்தலை தொகுதியில் 18 வேட்பாளா்களும் என மொத்தம் 4 தொகுதிகளிலும் 161 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மொத்தம் 1,274 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற இந்த தோ்தலில் 4 தொகுதிகளிலும் 4,710 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,530 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 1,645 வாக்காளா் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. தோ்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 88.8 சதவீத வாக்குகளும், கரூரில் 83.5 சதவீத வாக்குகளும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 84.14 சதவீதமும், குளித்தலையில் 86.15 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

25 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்துக்குள் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோா்களில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கரோனா தடுப்பூசிகள் போட்டவா்களும், கரோனா பரிசோதனை முடிவில் நெகடிவ் வந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா். பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com